முதியோர் வாழ்வு சிறக்க செங்கலடியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுகாதார விழிப்புணர்வுத் திட்டம்.

 


முதியோர் வாழ்வு சிறக்க செங்கலடியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுகாதார விழிப்புணர்வுத் திட்டம்.

முதியோர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் (RDHS) தொற்றா நோய் பிரிவின் ஒருங்கிணைப்பில் விசேட விழிப்புணர்வு மற்றும் நலன்புரித் திட்டம் இன்று (14.02.2026) செங்கலடியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு செங்கலடி குளோபல் (Global Hospital Chenkalady) வைத்தியசாலையின் பணிப்பாளர் சர்மினி உதயகுமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள வசந்தன் மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற்ற இந்த விசேட திட்டத்தில், முதியோர்களின் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.

* முதியோருக்கான பிரத்யேக சுகாதாரப் பரிசோதனைகள்

நிகழ்வின் ஆரம்பத்தில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) குழுவினர் மற்றும் செங்கலடி ஆதார வைத்தியசாலைக் குழுவினரால் முதியோர்களுக்கான விசேட மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட முதியோர்களுக்கு:

இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய் (NCD) பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான மருத்துவப் பதிவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

* நிபுணர்களின் விழிப்புணர்வு உரைகள்

முதியோர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் துறைசார் வல்லுநர்களால் பின்வரும் தலைப்புகளில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன:

மனநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் டான் சௌந்தரராஜா, முதியோர் பருவத்தில் ஏற்படும் தனிமை மற்றும் மன அழுத்தத்தைக் கையாளுதல் குறித்து உரையாற்றினார்.

உடல் ஆரோக்கியம்: தொற்றா நோய் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ருதேசன், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.

வாய் சுகாதாரம்: டாக்டர் எஸ். கோகுலரமணா, முதியோர்களுக்கான வாய் மற்றும் பல் சுகாதாரப் பராமரிப்பு முறைகளை எடுத்துரைத்தார்.

அரசு நலத்திட்டங்கள்: மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கலந்துகொண்டு, அரசாங்கத்தினால் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சலுகைகள் பற்றித் தெளிவுபடுத்தினார்.

* சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பு

நிகழ்வின் மதிய அமர்வில் மூப்பியல் விசேட நிபுணர் (Geriatric Specialist) டாக்டர் காந்தா நிரஞ்சன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி (DMO) டாக்டர் பரமானந்தராசா, மீராவோடை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஷோபிகா, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் குளோபல் வைத்தியசாலை பணியாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மதிய உணவைத் தொடர்ந்து, முதியோர்களை மகிழ்விக்கும் நோக்கில் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முதியோர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை ஒருங்கே மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஏராளமான முதியோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மேலும் நிகழ்வில் குறிப்பாக செங்கலடி குளோபல் வைத்தியசாலையின் பணிப்பாளர் சர்மிளா உதயகுமார் அவர்களின் இந்த மனிதநேயப் பணி, இன்றைய வணிக உலகில் ஒரு முன்மாதிரியான செயலாகும் என்றும் அதிதிகள் மற்றும் முதியவர்களினால் வெகுவான பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

(செங்கலடி நிருபர் சுபஜன்)