நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது - சஜித் பிரேமதாச !


நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட ஆட்சி தொடர்பில் இதுவரை இல்லாத அளவிற்குப் பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலைக்குப் பின்னர் நீதி வழங்கும் செயல்முறையுடன் தொடர்புடைய நபர்களை இலக்கு வைத்த முதல் படுகொலை இடம்பெற்றுள்ள நிலையில் நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் பாதாள உலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறினாலும், கொலைகள் நிகழும்போது, அரசாங்கம் அதை பாதாள உலக நடவடிக்கைகள் என்று மறுபுறம் தொடர்ந்து கூறி வருகிறது.

கடந்த 13 ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில், அதி பாதுகாப்பு வலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பெரு வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் நிறுத்தியிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, கொழும்பு ஜிந்துபிட்டி மற்றும் களுத்துறை வடக்கு பகுதிகளிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்று சட்டத்தின் ஆட்சியையும் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளையும் செயல்படுத்துவோர் மீதே இந்தப் படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் சட்டத்தரணிகள் மற்றும் நீதித்துறையில் ஈடுபட்டுள்ள ஏனைய தரப்பினரின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது. எனவே இவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 600 மீட்டர் தூரத்தில் பாதுகாப்பு அமைச்சும் இராணுவ தலைமையகமும் அமைந்துள்ளன. அரசாங்கம் சம்பவம் நடந்த இடத்தை உயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்று கூறினாலும், இது உண்மையிலே ஒரு உயர் பாதுகாப்பு வலயமாகும். தேசிய பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பு.

அதனால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட ஆட்சி தொடர்பில் இதுவரை இல்லாத அளவிற்குப் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்து இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவான காலத்திற்குள் இது பாதாள உலக செயற்பாடு என பொலிஸாரால் அறிவிக்கப்பட்டமையுடன், நமது நாட்டின் சட்ட ஆட்சிக்கும் அதே போன்று நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்கும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள அணுகுமுறை தொடர்பில் மக்களிடையே பாரதூரமான அவநம்பிக்கையை உண்டாக்கியுள்ள பின்னணியில், பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கின்றேன். அவற்றிற்கு சரியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

அதி பாதுகாப்பு வலயத்திற்கு மிக அருகிலான தூரத்தில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமையில் நமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?

உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலைக்குப் பின்னர் நீதி வழங்கும் செயல்முறையுடன் தொடர்புடைய நபர்களை இலக்கு வைத்த முதல் படுகொலை இதுவாக அமைந்து காணப்படுவதோடு, இதனால் நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு என்ன? இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு முன்னோக்கிய நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கின்றது?

படுகொலை நடந்து சிறிது நேரத்திற்குப் பின்னர் இந்தப் படுகொலையை பாதாள உலகக் கணக்கில் சேர்ப்பதன் மூலம் அரசாங்கம் மக்களை நம்ப வைக்க எதிர்பார்த்தது என்ன?

முறையான விசாரணை முடிவடைவதற்கு முன்னர் அனுமானிக்கப்பட்ட நிலைமையின் அடிப்படையில் விசாரணைகளை நடத்த முயற்சிப்பது விசாரணை நடவடிக்கைகளை தவறான திசையில் செலுத்தும் எதிர்பார்ப்பிலா? அல்லது, இந்த விசாரணை நடவடிக்கைகளை நடத்துவது தொடர்பில் ஏதேனும் தரப்பிலிருந்து ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவா?

அறிக்கைகளின் பிரகாரம், கடந்த ஆண்டில் மாத்திரம், 111 துப்பாக்கிச் சூடுகள் நடைபெறும் வரை அவற்றை தடுப்பதில் தோல்வியுற்றதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?

நமது நாட்டின் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையுடன் தொடர்புடைய நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலுவலர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணை நடத்தும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் யாவை?எனக்கேற்கிறேன என்றார்.