நாட்டின் இருவேறு பகுதிகளில் கோர விபத்துக்கள்: இருவர் பலி !


நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் - குருநாகல் வீதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் நோக்கிச் சென்ற லொறி, எதிர்திசையில் வந்த மற்றொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிலாபம் நோக்கிச் சென்ற லொறியின் ஓட்டுநர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் சிலாபத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய மற்றைய லொறி தப்பிச் சென்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - பசறை வீதியில் ஹிந்தகொட பகுதியில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பசறை நோக்கிச் சென்ற பஸ்ஸில் மிதிபலகையில் பயணித்த ஒருவர், பஸ்ஸில் இருந்து கீழே விழுந்ததில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த பயணி, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பதுளை பகுதியை சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.