மட்டக்களப்பு - கரவெட்டி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயம்

(வவுணதீவு நிருபர்)


மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் கிராம மக்கள் அவரை தேடி வருகின்றனர்.

கரவெட்டியைச் சேர்ந்த நல்லரெத்தினம் யோகராசா (வயது 63) என்பவர் வழமை போன்று கடந்த வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் கரவெட்டி ஆற்றின் களப்பு பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றவர் ஞாயிற்றுக் கிழமை (15) பிற்பகல் வரை வீடு திரும்பாத நிலையில் கடந்த இரு தினங்களாக ஆற்றுப் பகுதியில் உறவினர்களும் கிராம மக்களும் அவரை தேடி வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிஸாரிடமும் இவரது உறவினர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ் ஆற்றுப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் உள்ளதாகவும் இவரை முதலை பிடித்திருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இப் பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மீனவர் ஒருவரை முதலை பிடித்து அவரது உடல் பாகங்களை பிரதேச மக்கள் மீட்டதாகவும் அறிய முடிகிறது.