மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் வெளியிடப்படும் மேற்கோளி சஞ்சிகையின் இரண்டாவது பதிப்பு, பல்வேறு சவால்களைத் தாண்டி உத்தியோகபூர்வமாக இன்று (04) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில்,
2016 ஆம் ஆண்டு முதலாவது சஞ்சிகை வெளியானதைத் தொடர்ந்து, சரியாக பத்து வருடங்கள் கழித்து 2026 ஆம் ஆண்டில் இந்த இரண்டாவது சஞ்சிகை மலர்வது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விடயம் எனக் குறிப்பிட்டார். ஒரு நிறுவனம் சஞ்சிகை ஒன்றினை வெளியிடும் போதுதான் அந்த நிறுவனத்தின் உயர்வும், அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களது ஆற்றலும் திறனும் வெளிப்படுத்தப்படுவதோடு, அது ஒரு ஆவணப் பதிவாகவும் அமைகின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், "வலயம் ஆரம்பிக்கப்பட்டு 14 வருடங்களைக் கடந்திருக்கும் இவ்வேளையில், கல்விசார் அடைவுகளும் இணைப்பாடவிதானச் செயல்பாடுகளும் பிறர் மெச்சும் அளவிற்கு உயர்ந்து கொண்டு செல்கின்றன. இந்த நிலையில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் வலய உத்தியோகத்தர்களது ஆக்கத்திறன் விருத்திக்கு இடங்கொடுக்கும் வகையிலேயே 'மேற்கோளி' சஞ்சிகையை நாங்கள் வெளியிடுகின்றோம். சுமைகளைச் சுமையாக எண்ணாத காரணத்தினால், ஒரு சுபமான இரண்டாவது குழந்தையை இக்கல்வி வலயம் இன்று பிரசவித்துள்ளது," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், இந்த வெளியீடு பாடசாலைகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் எனவும், மாணவர்களிடமுள்ள பல்வேறு திறமைகளை வெளிக்கொணர அதிபர்கள் இத்தகைய சஞ்சிகை வெளியீடுகளில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.













