மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரக் கோட்பாடு மட்டுமல்ல, அது மனித சமுதாயத்தின் வளர்ச்சியைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் நோக்கும் ஒரு வாழ்வியல் தத் துவமாகும். கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட இந்தச் சிந்தனை, சமூகத்தை "அடிப்படை"(Base) மற்றும் "மேற்கட்டுமானம்" (Superstructure) என இரண்டாகப் பிரிக்கிறது. ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுகளே அதன் அடிப்படையாகும். இதில் மதம், சட்டம், கலாசாரம் மற்றும் கல்வி ஆகியவை அதன் மேற்கட்டுமானங்கள் ஆகும்.
முதலாளித்துவச் சமூகத்தில் கல்வி என்பது ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களைப் பரப்பவும், உழைக்கும் வர்க்கத்தை, அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக உள்ளது. அதாவது, ஆரம்பத்தில் பாடசாலைகள் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தங்களைப் புகட்டும் தளங்களாகச் செயல்பட்டன. இதற்கு மாறாக, மார்க்சியக் கல்வி தத்துவம், கல்வியானது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களைச் சூழ்ந்துள்ள சுரண்டல் முறையைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு விழிப்புணர்வு ஆயுதமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மார்க்சியக் கல்வியின் பிரதான நோக்கம் வர்க்க வேறுபாடுகள் இல்லாத ஒரு பொதுவுடமைச் சமுதாயத்தை உருவாக்குவதாகும். உலகம் நிலையானதல்ல, அது முரண்பாடுகளின் ஊடாகத் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் நிலவும் அநீதிகள் மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது.
தனிமனித முன்னேற்றத்தை விட சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மையே இங்கு முதன்மை பெறுகிறது. போட்டியை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவக் கல்விக்கு மாற்றாக, கூட்டுறவையும் பரஸ்பர உதவியையும் அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை மார்க்சியம் முன்மொழிகிறது. மாணவன் தன்னை ஒரு தனித்துவமான நபராக பார்க்காமல், தன்னை சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு அங்கமாகப் பார்க்கக் கற்றுக்கொள்கின்றான்.
வெறும் ஏட்டுக்கல்வி என்பது மாணவனைச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது. எனவே, கற்றல் என்பது செயலோடு (Action) தொடர்புடையதாக இருக்க வேண்டும். இதற்காகவே மார்க்ஸ் "பல்நுட்பக் கல்வி" (Polytechnic Education ) என்ற கருத்தை முன்வைத்தார்.
இதன்படி, ஒரு மாணவன் உயர்மட்ட அறிவியல் மற்றும் கணித அறிவைப் பெறுவதோடு, ஏதேனும் ஒரு கைத்தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது "அறிவுசார் உழைப்பு" (Mentral Labour) மற்றும் "உடல் உழைப்பு"(Physical Labour) ஆகியவற்றுக்கு இடையே உள்ள பாரிய இடைவெளியைக் குறைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு உழைக்கும் வர்க்கத்தின் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றுவதோடு, மாணவர்களை முழுமையான ஆளுமை கொண்டவர்களாக மாற்றுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, கல்வியில் சமத்துவத்தைப் பற்றிப் பேசும்போது பாடப்புத்தகங்கள் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவின் பங்களிப்பைச் சோசலிசக் கண்ணோட்டத்தில் நோக்குகின்றன. 1945 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வித் திட்டம், கல்வியைப் பணமிருப்பவர்களுக்கு மட்டுமேயான சொந்தம் என்ற நிலையில் இருந்து மாற்றி, ஏழை எளிய மக்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்கியது. இது மார்க்சியம் வலியுறுத்தும் "கல்விச் சமத்துவம்" என்ற கொள்கையின் நடைமுறை வடிவமாகும்.
இலவசக் கல்விச் சட்டத்தோடு இணைந்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முக்கிய நடவடிக்கை மத்திய மகா வித்தியாலயங்களை நிறுவியமையாகும். மார்க்சியக் கொள்கையின்படி, சமூக நீதி என்பது வளங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் தங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள பிரபல்யமான பாடசாலைகளுக்கு (உதாரணமாக: றோயல் கல்லூரி) நிகரான தரமான கல்வியை, கிராமப்புற மாணவர்களுக்கும் வழங்கும் நோக்கில் இப்பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஒரு மத்திய மகா வித்தியாலயம் (மாத்தறை-அக்குரஸ்ஸ) அமைக்கப்பட்டது. இப்பாடசாலைகளில் நவீன ஆய்வுகூடங்கள், நூலகங்கள் மற்றும் விடுதி வசதிகள் வழங்கப்பட்டன. இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும்
இடையிலான கல்வித் தர இடைவெளியைக் குறைக்க உதவியது. பிராந்திய ரீதியாக நிலவிய கல்வி ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, கல்வியை ஜனநாயகப்படுத்துவதில் இச்சீர்திருத்தம் பாரிய பங்காற்றியது.
அதனைத் தொடர்ந்து, 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் திட்டம், வறிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் இலங்கையின் முன்னணிப் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் கல்வியில் நிலவிய மத மற்றும் தனியார் ஆதிக்கத்தைக் குறைத்தது. மேலும் அனைவருக்கும் பொதுவான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில் 1960 - 1961 காலப்பகுதியில் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களினால் பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களால் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைத்துணி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சீருடை வர்க்க அடையாளங்களை மறைத்து, பாடசாலைக்குள் அனைத்து மாணவர்களையும் சமமாக உணரச் செய்கிறது. போசாக்குக் குறைபாடு கற்றலைப் பாதிக்கும் என்பதால், வறிய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது மார்க்சியத்தின் "பொருளாதாரப் பாதுகாப்பு" என்ற அம்சத்தோடு தொடர்புடையது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், ஒரு மாணவனின் பொருளாதார நிலை அவனது கல்வித் திறனைத் தீர்மானிக்கக் கூடாது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
1980 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. . மேலும், 1998 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க அவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டாயக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டு, 5 முதல் 14 வயது வரையிலான அனைத்து பிள்ளைகளும் பாடசாலை செல்வது உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வாறான தொடர்ச்சியான நடவடிக்கைகள் இலங்கையில் கல்விச் சமத்துவத்தைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இலங்கையில் நடைமுறையில் உள்ள இலவசப் பாடப்புத்தகங்கள், குறைந்த வருமானம் பெறுவோருக்கான மகாபொல உதவித்தொகை போன்றவை "தேவைக்கேற்ற விநியோகம்"என்ற சோசலிசப் பொருளாதாரக் கொள்கையை ஒத்திருக்கின்றன. இவை வறிய மாணவர்கள் பொருளாதாரக் காரணங்களால் கல்வியிலிருந்து இடைவிலகுவதைத் தடுக்கின்றன.
இருப்பினும், வளப் பகிர்வில் கொழும்புக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் இன்னும் முழுமையான சமத்துவத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலோ பிரையரின் விமர்சனக் கல்வியியல் சிந்தனை கற்பித்தலில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இவர் கல்வியை வங்கி முறை என்று விமர்சிக்கிறார். இதில் ஆசிரியர் அறிவைத் திணிப்பவராகவும், மாணவர்கள் அதைச் சேமித்து வைக்கும் வெற்றுப் பாத்திரங்களாகவும் கருதப்படுகின்றனர். இது மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து அவர்களைச் சமூகக் கட்டமைப்புக்கு அடிபணியச் செய்கிறது.
இதற்கு மாற்றாக உரையாடல் முறை மூலம் கற்பித்தலை அவர் முன்வைக்கிறார். பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம் மூலம் மாணவர்கள் தங்களது உரிமைகளை கேட்டுப்பெற்றுக் கொள்ள தூண்டப்படுகின்றனர். கல்வி என்பது மாணவர்களைச் சமூக மாற்றத்திற்கான ஒரு முகவராக மாற்ற வேண்டும். இலங்கையின் தற்காலக் கலைத்திட்ட மாற்றங்களில் காணப்படும் மாணவர் மையக் கற்றல்முறைகள் ஓரளவுக்கு இந்த விழிப்புணர்வுச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவையே.
கல்வியில் மார்க்சியக் கொள்கை என்பது சமத்துவத்தை நோக்கிய ஒரு தொடர்ச்சியான போராட்டமாகும். இன்றைய உலகமயமாக்கல் சூழலில், கல்வி வணிகமயமாக்கப்படுவது ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. உபகார வகுப்பு (Tuition) கலாச்சாரம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் ஆதிக்கம் ஆகியவை கல்வியை மீண்டும் ஒரு வர்க்கப் பிரிவினைக்கு உள்ளாக்குகின்றன. இது வறிய மாணவர்களைப் போட்டித் தேர்வுகளில் பின்னுக்குத்தள்ளுகிறது.

எனவே, கல்வியை ஒரு லாபம் ஈட்டும் தொழிலாகப் பார்க்காமல், அது ஒரு சமூக முதலீடு என்ற கண்ணோட்டம் மீண்டும் வலுப்பெற வேண்டும். பாடசாலைகளுக்கு இடையிலான வளப் பகிர்வு சமப்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் இலவசக் கல்வி முறையைப் பாதுகாப்பதும்,
தொழில்நுட்பக் கல்வியைப் பரவலாக்குவதும் சமத்துவத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த கட்டங்களாகும். கல்வியினால் மட்டுமே ஒரு சுரண்டலற்ற, அறிவார்ந்த மற்றும் சமத்துவமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே மார்க்சியக் கல்வியியல் தரும் இறுதிச் செய்தியாகும்.
ரவிச்சந்திரன் கபிலக்சன்
கல்வியியல், இரண்டாம் வருட சிறப்புக்கற்கை மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்

.jpg)