
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் வான்தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், அஹ்மதிநெஜாட் இலங்கையின் நெருங்கிய நண்பர் என்றும், இந்த செய்தி தன்னை மிகவும் அதிர்ச்சியடையச் செய்ததாகவும் கூறினார்.
2008ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்த அஹ்மதிநெஜாட் , சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய மேம்படுத்தல் திட்டம் மற்றும் உமா ஓயா பன்முக அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதில் பங்காற்றியதாக அவர் நினைவுகூர்ந்தார்.
ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பர் நாடாக இருந்து வந்துள்ளது என்றும், வான்தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இந்த கடினமான நேரத்தில் ஈரான் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். அனைத்து தரப்பினரும் அமைதியை கடைப்பிடித்து, போரைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












