
இலங்கையில் முதியவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைக் குறைத்து வருவது எதிர்கால மனிதவளத்திற்குப் பெரும் சவாலாகும். இதனை எதிர்கொள்ள முறையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியமாகும் என இலங்கை சனத்தொகை சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மனோரி வீரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கை சனத்தொகை சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் சனத்தொகை வயதின் அடிப்படையில் 3 தொகுதிகளாகக் காணப்படுகின்றன. சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர் என சனத்தொகை வகைப்படுத்தப்படுகிறது.
சமகால சனத்தொகை இயக்கவியலை நோக்கும் போது முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர் 18 சதவீதமாகக் காணப்படுகின்றனர். அதேவேளை இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைத் திட்டமிட்டு குறைத்து வருகின்றனர். இது தொடர்பில் சகலரும் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
துறைசார் நிபுணர்கள் இது தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய இளம் தலைமுறையினரின் தேவைகளும் முன்னுரிமைகளும் மாறியுள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் முக்கிய தடையாக உள்ளன.
முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இளைஞர்கள் தங்களின் வயதான பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளனர். இதனால் தமக்கென ஒரு குடும்பத்தை உருவாக்குவதில் அவர்களுக்குச் சவால்கள் உள்ளன. இது ஒரு தற்காலிக விடயமாகத் தெரிந்தாலும், எதிர்காலத்தில் நாட்டின் மக்கள் தொகை சமநிலையில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.
மக்கள் தொகை மாற்றத்தில் முதியவர்கள் அதிகரிப்பதால், சுகாதாரத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இலங்கையர்கள் பொதுவாக 60 வயதைக் கடந்த பின்னரோ அல்லது நோய் வந்த பின்னரோதான் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகின்றனர். குறிப்பாக 40 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் முதுமையில் பிறரைச் சார்ந்து இருக்காமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.
நோய்களுடன் நீண்ட காலம் வாழ்வதைத் தவிர்த்து, நோயற்ற நீண்ட வாழ்வை உறுதிப்படுத்தும் கொள்கைகளை நாடு பின்பற்ற வேண்டும். அரசாங்கமும் தனியார் துறையும் தீர்மானங்களை எடுக்கும்போது வெறும் யூகங்களின் அடிப்படையில் எடுக்காமல், மக்கள் தொகை தொடர்பான துல்லியமான தரவுகளைப் பயன்படுத்த வேண்டும்.
இதற்காக இலங்கை சனத்தொகை சங்கம் (Population Association of Sri Lanka) எனும் அமைப்பு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதில் மருத்துவர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் புள்ளிவிபரவியலாளர்கள் இணைந்து தகவல்களை வழங்குகின்றனர்.
இலங்கையில் முதியவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைக் குறைத்து வருவது எதிர்கால மனிதவளத்திற்குப் பெரும் சவாலாகும். இதனை எதிர்கொள்ள முறையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியமாகும் என்றார்.












