திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் பயணிகள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்துகளினுள் கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது.
இது தொடர்பான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் முறைகேடுகள் குறித்து பின்வரும் இலக்கங்களுக்கு முறைப்பாடு அளிக்களாம்.
தொலைபேசி: 0112860860
வட்ஸ்எப் : 0702860860
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
புதிய கட்டண விபரங்கள்:
குறைந்தபட்ச பேருந்து கட்டணம்: ரூ. 27 இல் இருந்து ரூ. 30 ஆக உயர்வு.
அதிகபட்ச பேருந்து கட்டணம்: ரூ. 2,159 இல் இருந்து ரூ. 2,422 ஆக உயர்வு. (ரூ. 263 அதிகரிப்பு)
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக அறவிடும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0712595555 என்ற வட்ஸ்எப் இலக்கத்திற்குப் முறைப்பாடு அளிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது













