ஏப்ரல் 14 முதல் E-8 விசா திட்டத்தின் கீழ் தென் கொரியாவுக்கு பணிக்கு அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்



தென் கொரியாவிற்கு E-8 விசா திட்டத்தின் கீழ் மீண்டும் இலங்கையர்கள் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

இதன் முதல் குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) பயணமாகும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

முன்னதாக இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத ஏற்பாடுகளால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், அரசின் தலையீட்டின் மூலம் புதிய ஒப்பந்தங்களுடன் இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முன்முயற்சி திட்டமாக 16 இளைஞர்கள் தென் கொரியாவின் யோங்வோல் (Yeongwol) பகுதிக்கு விவசாயத் துறையில் பணியாற்ற அனுப்பப்படுகின்றனர்.

தற்போது இலங்கையர்கள் E-9, E-7 மற்றும் E-8 விசா பிரிவுகளின் கீழ் தென் கொரியாவில் பணியாற்றி வருகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 8 மாதங்கள் காலத்திற்கு பருவகால வேலைவாய்ப்பில் ஈடுபடுவார்கள். ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஒப்பந்த காலத்திற்குப் பிறகு திரும்பத் தவறினால், எதிர்கால வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடும் என துணை அமைச்சர் எச்சரித்தார். மேலும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.