இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (07) உத்தரவிட்டது.
ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நேற்று (7) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று (7) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர் குழுவினருக்கு, ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பேரை நியமித்தமை தொடர்பிலேயே இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஊழியர்களை நியமித்ததன் ஊடாக, ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு சுமார் 14.32 மில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நீண்டகால விசாரணைகளை அடுத்தே இக்கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சந்தேகநபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.











.jpg)
