அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்குத் திருப்பிச்செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அரசமுறை கடன் நிதி மூன்றாம் தரப்பினரால் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு தரவு மாற்றப்பட்டு, கணினி ஊடுருவல் மூலம் மோசடி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.
இதுகுறித்துக் கருத்துரைத்த சுமந்திரன், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதாக வழங்கிய வாக்குறுதியை நம்பியே தற்போதைய அரசாங்கத்துக்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் வாக்களித்தாகச் சுட்டிக்காட்டியதுடன், 'ஒருவருடத்துக்குள் மாகாணசபைத்தேர்தலை நடாத்துதல், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் என்பன உள்ளடங்கலாக தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை.
இருப்பினும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற நம்பிக்கை ஓரளவுக்கு இருந்தது. ஆனால் இப்போது அந்த நம்பிக்கையும் தகர்க்கப்பட்டிருக்கிறது' என விசனம் வெளியிட்டார்.
குறிப்பாக, ' தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் சிலரின் சொத்துக்குவிப்பு விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வசந்த சமரசிங்க, மஹிந்த ஜயசிங்க ஆகியோருக்குஎதிரான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இப்போது அமைச்சர் லால் காந்தவின் சொத்துகள் பற்றிய விடயமொன்று வெளிவந்திருக்கிறது.
மறுபுறம் நிலக்கரி ஊழலும் பூதாகரமாகியிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது திறைசேரியில் இருந்தும் நிதி களவாடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசாங்கம் இதனைக் கண்டறிந்தவுடன் உரிய நேரத்தில் வெளிப்படுத்தாமல் மூடிமறைத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது' என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
அதேபோன்று ' இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் திறைசேரியின் செயலாளர் ஒரு அரசியல்வாதியாவார். பிரதியமைச்சராகப் பதவி வகித்த அவர், அப்பதவியை இராஜினாமா செய்துவிட்டு, திறைசேரியின் செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டார்.
திறைசேரியின் செயலாளர் என்பது நிர்வாகக்கட்டமைப்பு சார்ந்த ஒரு பதவியாகும். அப்பதவிக்கு அரசியல்வாதி ஒருவர் நியமிக்கப்படக்கூடாது' என அவர் வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி கடந்த காலத்தில் அரசியல்வாதியாக இருந்த அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமையே 2022 இல் நாடு முகங்கொடுக்கநேர்ந்த தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்தாகப் பலரும் சுட்டிக்காட்டியிருந்தாகக் குறிப்பிட்ட சுமந்திரன், அதனையொத்த விதத்தில் இப்போது அரசியல்வாதி ஒருவரை திறைசேரியின் செயலாளராக நியமித்து, மிகக்குறுகிய காலத்திலேயே பெருந்தொகைப் பணம் களவாடப்பட்டிருப்பதும், அதனை அரசாங்கம் மூடிமறைக்க முற்பட்டமையும் பெரும் குறைபாடுகளாகும் என்றார்.






.jpg)






