40 ஆயிரம் தமிழர்களை இராணுவத்தினர் கொன்றார்கள் என்ற புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு சர்வதேச அரங்கில் வலுவிழந்துள்ள நிலையில் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை இராணுவத்தின் மீது சுமத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சிக்கின்றன. அதற்கு இந்த அரசாங்கமும் ஒத்துழைக்கிறது.சஹ்ரானிடம் பயிற்சிப் பெற்ற 300 பேர் தற்போதும் சமூகத்தில் சுதந்திரமாக உள்ளார்கள். மனித தற்கொலை குண்டுதாரிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவர்கள் நிச்சயம் மனித குண்டுகளாக வெடிப்பார்கள். இவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ' உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச் செல்லல்' நூல் வெளியீட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கையானது 1971 மற்றும் 1987 ஆம் ஆண்டு அரசியல் பயங்கரவாதத்துக்கும், 1983 முதல் 2009 ஆம் ஆண்டுவரை பிரிவினையாவாத பயங்கரவாதத்துக்கும், 2009 ஆம் ஆண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கும் முகங்கொடுத்துள்ளது. இந்த தாக்குதல்களால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
2019.04.21 ஆம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் பற்றி இன்றளவிலும் பேசப்படுகிறது. பிரதான சூத்திரதாரி யார் என்பது புரியாத புதிராகவே காணப்படுகிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் மற்றும் அமெரிக்காவின் எப்.பி.ஐ. அறிக்கை ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்து இந்த புத்தகத்தை படைத்துள்ளேன்.
விடுதலை புலிகள் அமைப்பின் பிரிவினைவாதிகளையும், புலம் பெயர் தமிழ் அமைப்புக்களையும் மகிழ்விப்பதற்காக தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குற்றச்சாட்டை இராணுவத்தினர் மீது சுமத்த முயற்சிக்கிறது.
இராணுவத்தினர் 40 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு சர்வதேச சட்டத்தில் வலுவிழந்துள்ள நிலையில், இந்த குண்டுத்தாக்குதல் ஊடாக இராணுவத்தினரை பழிவாங்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் இராணுவத்தில் பெரும்பான்மையான்மாக சிங்களவர்களே உள்ளார்கள். எமது இராணுவத்தினர் பழிவாங்கப்பட கூடாது என்பதற்காகவே இந்த பணியை நான் பொறுப்பேற்றேன்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச் செல்லல் என்ற நூலில் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறச் செய்வதற்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்த நியாயமான சாட்சிகள் உள்ளதா ?
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இந்த தாக்குதல்களை நடத்தினார்கள் என்று குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கு சாதகமான சாட்சிகள் உள்ளதா? சாஹ்ரான் உட்பட பயங்கரவாதிகள் கோட்டபய ராஜபக்ஷவுக்கான உயிரை தியாகம் செய்வதற்கான நோக்கம் என்ன? இராணுவ புலனாய்வு பிரிவு இந்த தாக்குதலை நடத்துவதற்கான உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்விகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளோம்.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சானி அபேசேகர தொடர்பில் இந்த புத்தகத்தில் 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளேன். குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு இவர் தான் அமைதியான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். பயங்கரவாதி சஹ்ரானை பிடிப்பதற்கு பொறுப்பாக இருந்தவர் இன்று குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடுவது இயற்கை அடிப்படை கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானது.
குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் வனாத்தவில்லு பகுதியில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க 'சஹ்ரானை பிடிப்பதற்கு தனக்கு மேலதிகமாக பொலிஸ் குழுக்கள் வேண்டும்' என்று சானி அபேசேகரவிடம் வினவியுள்ளார்.ஆனால் சானி அபேசேகர அதற்கு அனுமதியளிக்கவில்லை. இந்த விடயம் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது ' நாட்டின் மத கலவரம் ஒன்று தோற்றம் பெறும் என்பதான் தான் அதற்கு அனுமதியளிக்கவில்லை.'என்று நீதியரசர்கள் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் 2018 மார்ச் மாதமளவில் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவு சஹ்ரானின் குருநாகல் வீட்டை சுற்றிவளைத்த போது குற்றப்புலனாய்வு பிரிவு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ' யாரை கேட்டு அங்கு சென்றீர்கள். அந்த விசாரணையை நாங்கள் தான் மேற்கொள்கிறோம்.உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள்| என்று குறிப்பிட்டுள்ளது. சானி அபேசேகர தான் இதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவனது குழுவினர் குண்டுத்தாக்குதல்களை சிறப்பாக நடத்துவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் திரைமறைவில் இருந்து செயற்பட்டுள்ளார்கள்.
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற கேள்வி கடந்த 7 ஆண்டுகாலமாக தொடர்கிறது.இஸ்லாமிய அடிப்படைவாததத்தால் ஈர்க்கப்பட்ட மௌலவியான சஹ்ரான் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் நேரடியாக இணைவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சித்து, அவை தோல்வியடைந்த பின்னணியில் ஐ.எஸ்.ஸ்ரீ லங்கா என்ற அமைப்பை உருவாக்கி இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்களையும்,மூளைச்சலவை செய்தவர்களையும் ஒன்றிணைத்து 2017 நவம்பர் மாதம் அநுராதபுரம் றம்பேவ காட்டுப்பகுதியில் சத்தியபிரமாணம் செய்து அந்த காணொளியை சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைமையகத்துக்கு மொஹமட் அரூஸ் ஊடாக அனுப்பி வைத்துள்ளான்.
2017 நவம்பர் முதல் 2018 டிசெம்பர் வரையான காலப்பகுதியில் ப யங்கரவாதி சஹ்ரான் மற்றும் ரில்வான் ஆகியோர் சுமார் 300 பேருக்கு தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவதற்கு 5 பயிற்சி நிலையங்கள் ஊடாக பயிற்சியளித்துள்ளார்கள். இவர்கள் 2019 ஆகஸ்ட் மாதம் கண்டி ரந்தொலி பெரஹராவின் மீது தாக்குதல் நடத்தவே திட்டமிட்டிருந்தனர்.
இந்த காலப்பகுதியில் பயங்கரவாதி சஹ்ரானின் அணிக்குள் உள்ளக முரண்பாடுகள் தோற்றம் பெற்ற நிலையிலும், பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதையும் அறிந்தும், நியுசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையில் 2019.04.21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்தினார்கள்.
இலங்கையில் ஐ.ஸ் அமைப்பை உருவாக்கியது, ஆட்களை சேர்த்தது, தாக்குதலுக்காக திட்டமிட்டது, குண்டுகளை தயாரித்தது அனைத்தையும் செய்தது பயங்கரவாதி சஹ்ரான். ஆகவே அவன் தான் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி. அபு ஹிந்,சொனிக் சொனிக், சுரேஸ் சலே, பிள்ளையான் ஆகியோரோ அல்லது இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளோ பிரதான சூத்திரதாரியல்ல, பிரதான சூத்திரதாரியை தேடி 7 ஆண்டுகளை வீணடித்துள்ளோம்.
2019.04.29 ஆம் திகதி சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ரில்வான், சாரா ஜெஸ்மின் உட்பட அனைவரும் உயிரிழந்து விட்டார்கள். ஆகவே சாரா தொடர்பான சந்தேகங்கள் இத்துடன் முடிவடைந்து விட்டது. சாரா இந்தியாவுக்கு செல்லவில்லை. உலகை விட்டே சென்று விட்டாள்.
சமூகத்தில் தற்போதும் 300 மனித தற்கொலை குண்டுதாரிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவர்கள் நிச்சயம் மனித குண்டுகளாக வெடிப்பார்கள். இவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யுத்தம் முடிவடைந்தவுடன் புலி போராளிகளுக்கு முறையான புனர்வாழ்வளித்ததால் தான் 2009 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு கொள்கை மீளுருவாக்கப்படவில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. மத்ரஸா பாடசாலைகள் கண்காணிக்கப்படவில்லை. சஹ்ரான் உருவாக்கிய மத்ரஸா பாடசாலைகள் இன்றும் இயங்குகின்றன. அவற்றில் கற்பிக்கும் பாடங்களும் நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு முரணாக உள்ளது. குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான். இவரை தவிர்த்து பிறிதொரு பிரதான சூத்திரதாரி உள்ளார் என்று குறிப்பிடுபவர்கள் என்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபடலாம். நான் தயாராகவே உள்ளேன் என்றார்.


.jpg)





.jpg)




