ரூ.7.75 இலட்சம் மதிப்புள்ள சட்டவிரோத அலங்காரத் தாவரங்களுடன் இலங்கை வியாபாரி கைது


அலங்காரத் தாவரங்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற 40 வயதுடைய இலங்கை வியாபாரி ஒருவர் இன்று (11) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வெய்யங்கொடையைச் சேர்ந்த இந்த நபர், இந்தியாவின் பெங்களூரிலிருந்து IndiGo (6E-1183) விமானத்தில் அதிகாலை 12.45 மணியளவில் வந்திருந்தார்.

விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள “Green Channel” வழியாக பொருட்களை அறிவிக்காமல் வெளியேற முயன்ற போது சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரது பயணப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 அலங்காரத் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேவையான அனுமதிகள் இன்றி இந்தத் தாவரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தாவர தனிமைப்படுத்தல் மற்றும் வனவிலங்கு சட்டங்களுக்கு முரணானது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அனைத்து அலங்காரத் தாவரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேக நபருக்கு ரூ.100,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.