ரணில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை ஒரு தசமாவது மாற்றாமல் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது - பேராசிரியர் சரித ஹேரத்


தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கு வழங்கிய தெளிவான வாக்குறுதிகள் மற்றும் சமூக உடன்படிக்கையின் அடிப்படையிலேயே ஆட்சியைப் பொறுப்பேற்றது. ஆனால், ஆட்சிக்கு வந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், அரசாங்கம் தான் நாட்டுக்கு முன்வைத்த கொள்கை விளக்க அறிக்கையிலிருந்து முழுமையாக விலகி, முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இன்றைய தினம் (9) எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த அதே வேலைத்திட்டங்களை ஒரு தசமாவது  மாற்றாமல் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற கொள்கை பிரகடனத்தின் ஊடாக உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், தரைமட்டத்தில் அத்தகைய எவ்வித மாற்றமும் இதுவரை நிகழவில்லை.

உண்மையில், ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருக்களைத் திருடி, கடந்த 76 ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்டவற்றுக்கு வர்ணம் பூசி காலத்தைக் கடத்தும் ஒரு 'சிறிய விடயங்களைச் செய்யும்' அரசாங்கமாகவே தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது.

அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகக் கொள்கைகள் குறித்தும் பேராசிரியர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். புதிய சட்டங்களை இயற்றி நிர்வாகத்தை நவீனப்படுத்துவதாகக் கூறிய அரசாங்கம், பழைய அரசாங்கங்கள் கொண்டு வந்த சட்டமூலங்களைத் தவிர புதிய எதனையும் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை.

பொதுமக்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லும்போது இன்றும் பழைய சவால்களையே எதிர்கொள்கின்றனர். அதேபோல், சமூக நலன்புரி (Social Welfare) மற்றும் சமூகப் பாதுகாப்பு (Social Protection) ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் குழப்பமடைந்துள்ளது. வறுமையின் பிடியில் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வலுவூட்டுவதே சமூகப் பாதுகாப்பாகும்,

ஆனால் அரசாங்கம் சமூக நலன்புரி விடயங்களில் எவ்வித முன்னேற்றத்தையும் காட்டாமல், சமூகப் பாதுகாப்பில் செய்த மிகச்சிறிய மாற்றங்களை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் போன்ற நஷ்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கத்திடம் முறையான தூரநோக்குச் சிந்தனை இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி கொள்வனவு செய்ததில் பாரிய ஊழல் நடந்துள்ளதாகத் தணிக்கை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார். நிலக்கரி கொள்வனவுக்கான டெண்டர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு முடிந்த மறுநாளில் பதிவு செய்யப்பட்ட, தகுதியற்ற ஒரு நிறுவனத்திற்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இது பாரிய சட்டவிரோதச் செயலாகும். தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதுடன், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய டீசல் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்காக அரசாங்கம் மேலதிகமாகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. முந்தைய அரசாங்கங்களின் அதே ஊழல் முறையைத் தற்போதைய அரசாங்கமும் பின்பற்றுவதுடன், இதில் எரிசக்தி அமைச்சருக்கு உள்ள தொடர்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இத்தகைய கறைகளை அரசாங்கம் உடனடியாகத் துடைக்கத் தவறினால், மக்கள் மத்தியில் அவர்கள் கொண்டுள்ள நற்பெயர் முற்றாக அழிந்துவிடும். தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகத்தோடு வந்தாலும், ஜே.வி.பி தனது பழைய 71 கிளர்ச்சிகளைக் கொண்டாடுவது போன்ற அவர்களின் கம்யூனிசக் கொள்கைகளையே இன்றும் பின்பற்றி வருவதாகவும், இது அவர்களின் கொள்கை அறிக்கைக்கு முற்றிலும் முரணானது என்றும் பேராசிரியர் சரித ஹேரத் மேலும் தெரிவித்தார்.