செங்கலடியில் தேசிய 'புண்ணிய கிராமம்' பெருவிழா

 

(செங்கலடி நிருபர் சுபஜன்)


செங்கலடியில் தேசிய 'புண்ணிய கிராமம்' பெருவிழா! மாணவர்களின் கலைத்திறன்களுடன் கோலாகலமாக நடைபெற்றது

மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசத்தில் ஆன்மீகத்தையும் பண்பாட்டையும் வளர்க்கும் நோக்கில், 'புண்ணிய கிராமம்' எனும் விசேட நிகழ்வு இன்று (26.04.2026) ஞாயிற்றுக்கிழமை செங்கலடி ஐயங்கேணி ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் ஆலய அறநெறிப் பாடசாலை ஆகியவை இணைந்து இந்த ஆன்மீக விழாவினை ஏற்பாடு செய்திருந்தன.

'மக்கள் சேவையே மகேசன் சேவை' எனும் உயரிய தாரக மந்திரத்துடன் காலை நிகழ்வுகள் ஆரம்பமானது. பிரதேச செயலாளர் திரு. கே. தனபாலசுந்தரம் அவர்களால் நந்திக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆலயப் பிரதம குரு க.சுவர்னேஸ்வரன், அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர், பிரதேச செயலாளர் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் இணைந்து மங்கள விளக்கேற்றி நிகழ்வை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையேறின:

வரவேற்பு நடனம்: யோகித்ஞா அர்ச்சனா, கோவிந்தராஜ் அனிதா உள்ளிட்ட மாணவியர் குழுவினரால் நிகழ்த்தப்பட்டதுடன் வில்லுப்பாட்டு: மாணவர்களின் பக்தி ததும்பும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி இடம்பெற்றது.

'புண்ணிய கிராமம்' எனும் தலைப்பில் கோவிந்தன் சகியானியும், 'ஆரோக்கியமான வாழ்வு' எனும் தலைப்பில் நகுலேஸ்வரன் ஹரி பிரசாத் ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக, 2024ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற அறநெறித் திறன் போட்டிகளில் பங்குபற்றி மூன்றாம் இடத்தைப் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். காந்தரூபி இராஜினி, பேரின்பராஜா நிதுஷானா, சுவர்ணேஸ்வரன் லிகித்ரி உள்ளிட்ட எட்டு மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இன்றைய தின நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் நிறைவுப் பகுதியில் சிறப்புரை ஆற்றிய ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் திரு. கே. தனபாலசுந்தரம் அவர்கள், 'புண்ணிய கிராமம்' திட்டத்தின் மகத்துவம் குறித்து விரிவாகப் பேசினார்.

அவர் தனது உரையில், 'ஒரு கிராமம் புண்ணிய பூமியாகத் திகழ்வதற்கு அந்த ஊரில் வாழும் மக்கள் அறநெறி சார்ந்த பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்திட்டமானது இளைய தலைமுறையினரை ஆன்மீகப் பாதையில் வழிநடத்துவதுடன் மட்டுமல்லாது , பெரியவர்கள் பெற்றோர்களுக்குமான முக்கிய நிகழ்வாகும், மேலும் இது சமூகத்தில் ஒழுக்கமான பிரஜைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதி நாம் அனைவரும் இப்பணியில் கைகோர்க்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர், செயலாளர்; பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர்; கலந்துகொண்டனர்.