ராஜபக்ஷர்கள் மீதான வெறுப்பினால் மக்கள் அநுரகுமாரவை தெரிவு செய்தார்கள் , அதிகாரத்தை கோருவதற்கு நாமலுக்கு தார்மீக உரிமையும் கிடையாது - ஹேஷா விதானகே



ராஜபக்ஷர்கள் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி நாட்டு மக்களை ஏழ்மையாக்கினார்கள். ராஜபக்ஷர்கள் மீதான வெறுப்பினால் தான் மக்கள் அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். அதிகாரத்தை மீண்டும் கோருவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொலன்னாவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய மக்கள் சக்தி ஊழலுக்கு எதிராக செயற்படும், கடந்த கால ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பும் என்று எதிர்பார்த்தே நாட்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள்.ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருட காலத்தில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றுக்கு அமைச்சரவை பொறுப்புக்கூறவில்லை. அரச அதிகாரிகளே பலியாக்கப்பட்டள்ளார்கள்.

ராஜபக்ஷர்களின் ஊழல் மோசடிகள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன உட்பட பல ஊழல்வாதிகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்றும் குறிப்பிட்டோம். இன்றும் குறிப்பிடுகிறோம்.

பொருளாதார மீட்சி பற்றி நாமல் ராஜபக்ஷ பேசுவது வேடிக்கையாகவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் காலத்தில் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. அந்த அமைச்சரவையில் சகல ராஜபக்ஷர்களும் அங்கம் வகித்தார்கள்.

ராஜபக்ஷர்கள் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி நாட்டு மக்களை ஏழ்மையாக்கினார்கள். ராஜபக்ஷர்கள் மீதான வெறுப்பினால் தான் மக்கள் அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். அதிகாரத்தை மீண்டும் கோருவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பலர் தற்போது தயாராகியுள்ளார்கள். இந்த நாட்டில் அடுத்த தலைமைத்துவத்துக்கான தகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாசவுக்கு மாத்திரமே உண்டு என்றார்.