ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தை ஒத்த எண்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடி !


ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தை ஒத்த எண்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான போலியான அழைப்புகள் அல்லது செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கத்தை ( 115226126) ஒத்த +94115226126 மற்றும் +0115226126 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், வாட்ஸ்அப் செய்திகள் ஊடாகவும் இனந்தெரியாத தரப்பினர் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனினும் ஆட் பதிவு திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் மேற்கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அழைப்புகளை மேற்கொள்வதில்லை.

இவ்வாறான இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளின் போது உங்களது அடையாள தேசிய அடையாள அட்டை விபரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்த்துக் கொள்ளவும்.

அண்மையகாலமாக இடம்பெறும் இவ்வாறான மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம். அவ்வாறான சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறும்பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.