புத்தாண்டு காலத்தில் பட்டாசு தட்டுப்பாடு !


டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பட்டாசு உற்பத்திகள் அழிந்ததாலும், மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ள காரணத்தினாலும், புத்தாண்டு காலத்தில் பட்டாசுப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய மாகாண பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அதுல அல்விஸ், டித்வா புயலால் மூலப்பொருட்களின் விலை சமீபத்தில் அதிகரித்ததாலும், பொருட்கள் அழிந்ததாலும் பட்டாசுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் பாறைச் சரிவுகள் காரணமாக, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளில் சுமார் 90 சதவீதம் அழிந்துவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

அழிந்த பட்டாசு உற்பத்திகளுக்குப் பதிலாக புதிதாக பட்டாசுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு கணிசமான கால அவகாசம் எடுப்பதாகவும், இந்தத் உற்பத்தித் தொழிலானது 100 சதவீதம் கையால் செய்யப்படுவதால், உற்பத்திச் செயல்முறை மிகவும் மெதுவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பட்டாசுத் தொழிலில் பயன்படுத்தப்படும் அலுமினியம், பேரியம் நைட்ரேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் போன்ற மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதனால் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதனால் விற்பனையின்போதும் பற்றாக்குறை நிலை காணப்படுகிறது என்றும் அவர் கூறினார்.