தற்காப்புக்கான உரிமை என்பது பிறரால் வழங்கப்படும் சலுகை அல்ல. மாறாக அது ஒவ்வொரு இறையாண்மை கொண்ட தேசத்தின் உள்ளார்ந்த உரிமையாகும். உலகம் உண்மையில் அமைதியின் மீது அக்கறை கொண்டிருந்தால், ஒடுக்கப்பட்டவர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு இலகுவாக அறிவுரை கூறுவதை விடுத்து, ஒடுக்குமுறையாளரை துணிச்சலுடன் எதிர்கொள்ள முன்வரவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்திருக்கும் மோதல்களின் பின்னணியில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அலி சப்ரி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஒரு நாடும் அதன் மக்களும் திட்டமிட்டுக் குறிவைக்கப்படும்போது, அந்நாட்டின் இறையாண்மை மீறப்படும்போது, அதன் இருப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்போது, அதற்கு நிகராக அந்த நாடு எதனைச் செய்யவேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது? மௌனத்தையா? அல்லது அடிபணிதலையா?
சுயமரியாதை கொண்ட எந்தவொரு நாடும் தனது சொந்த அழிவை எதிர் நடவடிக்கைகள் எவையுமின்றி வெறுமனே வேடிக்கை மாத்திரம் பார்த்துக்கொண்டிருக்காது.
எனினும் இன்றளவிலே நாம் மிகுந்த கரிசனைக்குரிய இரட்டை நிலைப்பாட்டையே காண்கிறோம். ஆக்கிரமிப்பாளர் தண்டனை ஏதுமின்றித் துணிச்சலாகச் செயற்படுகிறார். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கோ 'நிதானத்து செயற்படல்' குறித்து உபதேசிக்கப்படுகிறது. வன்முறையை கட்டவிழ்த்துவிடுபவர்களுக்கு அதனை நிறுத்தும்படி மிக அரிதாகவே அறிவுத்தப்படுகிறது. ஆனால் தற்காப்புக்காகப் போராடுபவர்களோ 'உலகளாவிய விளைவுகளைக் கருத்திற்கொள்ளும்படி' எச்சரிக்கப்படுகிறார்கள். இது நியாயமானதோ அல்லது தர்க்க ரீதியில் ஏற்புடையதோ அல்ல. மாறாக இதுவொரு ஆழமான அநீதியாகும்.
தற்காப்புக்கான உரிமை என்பது பிறரால் வழங்கப்படும் சலுகை அல்ல. மாறாக அது ஒவ்வொரு இறையாண்மை கொண்ட தேசத்தின் உள்ளார்ந்த உரிமையாகும்.
உலகம் உண்மையில் அமைதியின் மீது அக்கறை கொண்டிருந்தால், ஒடுக்கப்பட்டவர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு இலகுவாக அறிவுரை கூறுவதை விடுத்து, ஒடுக்குமுறையாளரை துணிச்சலுடன் எதிர்கொள்ள முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








.jpg)




