கனடா வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி - மூவர் கைது


கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த மூவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவிலுள்ள நிறுவனமொன்றுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடமிருந்து சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பில் பணியகத்திற்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதற்கமைய, இந்த மோசடியுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் ஏனைய சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்புச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேவேளை ஏனைய இரு சந்தேகநபர்களும் ஏப்ரல் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அவ்விருவரும் நேற்று வியாழக்கிழமை (09) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களைப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களைச் சேர்ப்பதும் பணம் அறவிடுவதும் சட்டவிரோதமானது என்பதுடன், பணியகத்தின் அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அனுமதிப்பத்திரம் பெற்ற முகவர் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வெளிநபர்களிடம் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு வேலைவாய்ப்பு எதிர்பார்ப்போரிடம் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஒருவருக்குப் பணம் வழங்குவதற்கு முன்னர், அது குறித்த தகவல்களைப் பணியகத்தின் 1989 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பணியகம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.