அத்துடன் இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்து, குற்றவியல் கோவை 1994ஆம் ஆண்டு 22இன் கீழ் முதலாம் பிரிவு சித்திரவதை தடுப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்றுப் பொருட்களுடன் எதிர்வரும் 22ஆம் திகதி வழக்குத் தாக்குல் செய்யுமாறு பொலிஸாருக்கு புதன்கிழமை (22) நீதவான் கட்டளையிட்டு உத்தரவிட்டார்.
கடந்த 5ஆம் திகதி செட்டிப்பாளையம் கடற்கரையில் கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த மீனவரை, சுருக்கு வலை கொண்டு மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, ஈயம் வைத்திருந்த வரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அந்த மீனவரை அக்குழுவினர் 2 மணித்தியாலங்களாக முழங்காலில் இருத்தி, அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட மீனவர், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த கடற்படை அதிகாரியை கடந்த புதன்கிழமை (22) கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்துக்கொண்டபோது வழக்காளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் கோவை 314இன் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தது பிழையானது. வழக்காளியை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார். அது குற்றவியல் கோவை 1994ஆம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவு சித்திரவதை தடுப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்குதல் செய்ய வேண்டியதை பொலிஸார் எதிராளிக்கு சாதகமாக 314 கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்பதுடன் பொலிஸார் நேரடியாக சாட்சிகளின் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தபோதும் அதனை இங்கு சமர்ப்பிக்காது பொலிஸார் செயற்பட்டுள்ளனர் என சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நீதவான், பொலிஸார் 314இன் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கின் பிரகாரம் கடற்படை அதிகாரியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதுடன் பொலிஸார் மீண்டும் விசாரணை செய்து குற்றவியல் கோவை 1994ஆம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்றுப் பொருட்களுடன் எதிர்வரும் 22ஆம் திகதி கடற்படை அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.






.jpg)






