ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்த பொருளாதாரம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது - வஜிர அபேவர்தன
அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாகப் பொய்களைக் கூறி வருவதன் காரணமாகவே, இலங்கையின் பொருளாதாரம் இன்று பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதனைத் தொடர்வதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்த பொருளாதாரம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் இலங்கை மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறுவதைத் தவிர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை வரலாற்றில் அதிகளவு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்த அரசாங்கமாக தற்போதைய ஆட்சி மாறியுள்ளது. 78 வருட கால வரலாற்றில் நாட்டை நிர்வகித்த கட்சிகள் சிலவற்றைச் செய்திருந்தாலும், தனிப்பட்ட பதவி ஆசைகளுக்காக மக்களை ஏமாற்றி, பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ளனர். இனிமேலாவது பொய் சொல்வதை நிறுத்துவதே நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.
கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க ஆட்சியைப் பொறுப்பேற்ற போதெல்லாம் முறையான இலக்குகளுடன் செயற்பட்டார். நெருக்கடியான கால கட்டத்திலும் கூட எரிபொருள் விலைகள் மக்களால் தாங்கிக் கொள்ளக் கூடியளவுக்கு முகாமைத்துவம் செய்யப்பட்டன. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி உயர்ந்து செல்கின்றன. 2024 செப்டம்பரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஒப்படைக்கும் போது 344 ரூபாவாக இருந்த பெற்றோல் இன்று 398 ரூபாவாகவும், 2,892 ரூபாவாக இருந்த எரிவாயு 4,765 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பொய்களைக் கூறி நாட்டை நிர்வகித்தால், இலங்கை மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அரசாங்கத்தின் இந்தத் திட்டமிடப்படாத மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்ட பயணத்தால், மிக விரைவில் இந்த ஆட்சி பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும் என்றார்.












