கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் சுஹாரா புகாரி



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் காேரி பாத்திமா சுஹாரா புகாரியினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடைக்கால மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன் பிரகாரம் வெற்றிடமாகியுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவிக்கு விரைவாக ஒருவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துவருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுஹாரா புகாரியினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு செவ்வாய்க்கிழமை (31) நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் கொழும்பு மாநகர சபைக்கு நியமிக்கப்பட்ட பாத்திமா சுகாரா புகாரி, கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாக கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். அவரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன் பிரகாரம் அவர் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டார்.அதன் பிரகாரம் அவரது கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியும் இரத்தாகியது. என்றாலும் இதற்கு எதிராக அவர் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அவரது இடைக்கால மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் கொழும்பு மாநகர சபைக்கான புதிய உறுப்பினர் ஒருவரை நியமிக்க இருக்கிறோம். இது தொடர்பில் கட்சியின் செயற்குழு மற்றும் கட்சியின் கொழும்பு மாநகர உறுப்பினர்களுடன் கலந்துரையாடி பெண் உறுப்பினர் ஒருவரை விரைவில் பெயரிட இருக்கிறோம் என்றார்.