போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது


யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலும்மஹர பகுதியில், போலி அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (25) இரவு யக்கல பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்தகைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரிடமிருந்து போலி தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த மோசடிகள் தொடர்பாக மாரவில நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.