நிலக்கரி பிரச்சினையால் ஏற்படும் இழப்பு அந்த நிறுவனத்திடம் அறவிடப்படும் - ஜனாதிபதி



நிலக்கரியின் தரத்தில் பிரச்சினை உள்ளது. இது விலைமனுகோரல் நடைமுறையின் பிரச்சினையல்ல, விநியோகிக்கும் நிறுவனம் எமக்குச் சரியான முறையில் வழங்காததுதான் அதற்கான காரணமாகும்.தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் இழப்பை அந்த நிறுவனமே ஏற்க வேண்டும்.இல்லையேல் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். நிலக்கரி பிரச்சினையால் ஏற்படும் சுமார் 7 பில்லியன் இழப்பு அந்த நிறுவனத்திடம் அறவிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற அமர்வின் போது விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

மின்சாரக் கட்டணப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால், அது மூன்று வழிகளில் உருவாகிறது. முதலாவது, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமை. இரண்டாவது பிரச்சினை, குறிப்பாக பர்னஸ் எண்ணெய் , நெப்தா மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளமை.

மூன்றாவதாக, எதிர்க்கட்சிகள் எப்போதும் கூறுவது போல, நிலக்கரியின் தரம் குறைவாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சார அலகுகள் குறைவாக உற்பத்தி செய்யப்படுவதால், அவற்றை ஏனைய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறும் போது ஏற்படும் மேலதிக செலவு. அதேபோல், தற்போது எமக்கு மேலதிகமாக மசகு எண்ணெய் தொடர்பாகவும் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து நாம் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பெறுகிறோம். ஆனால் மசகு எண்ணெயை மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தே பெற வேண்டியிருந்தது. மசகு எண்ணெயுடன் வரவிருந்த ஒரு கப்பல் தாமதமானது.

மற்றொரு கப்பல் வரவிருந்தது, அதுவும் தாமதமாகியுள்ளது. ஏப்ரல் நடுப்பகுதியில் நாட்டுக்கு ஒரு மசகு எண்ணெய் கப்பல் வரும். இதனால் மின் உற்பத்தி நிலையங்கள் ஒருவித அபாயத்தை எதிர்கொள்கின்றன.

அதன் அடிப்படையில் சுத்திகரிப்பு நிலையத்தை சில நாட்களுக்கு மூட வேண்டியிருக்கும். இந்த சுத்திகரிப்பு நிலையத்தில்தான் எமக்குத் தேவையான நெப்தா மற்றும் பர்னஸ் எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன.

இந்த அபாயத்தை முன்கூட்டியேஅறிந்து பர்னஸ் எண்ணெயைத் தனியாக இறக்குமதி செய்யத் தீர்மானித்திருந்தோம். அந்தக் கப்பலும் பெரும்பாலும் ஏப்ரல் 13 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டுக்கு வரும்.

மசகு எண்ணெயைச் சுத்திகரித்து பர்னஸ் எண்ணெயைப் பெறுவதை விட, பர்னஸ் எண்ணெயை நேரடியாக இறக்குமதி செய்யும்போது ஏற்படும் செலவு அதிகமாகும்.

அதேபோல், சுத்திகரிப்பு நிலையத்தை சில நாட்களுக்கு மூட நேரிட்டால், தேவையான நெப்தா உற்பத்தி செய்யப்படாவிட்டால், நாம் அவற்றை டீசல் மூலம் இயக்க வேண்டியிருக்கும். அவ்வாறு நிகழும்போது எமது மின்சாரக் கட்டணத்தில் மேலதிக தாக்கம் ஏற்படும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள அந்தத் துறைமுகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படத் தொடங்கின. அந்த கப்பல் பாதைகள் முடக்கப்பட்டன. இதனால் மசகு எண்ணெய் இறக்குமதி செய்வது மிகவும் கடினமான சூழலாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது திறக்கப்பட்டுள்ள கடன் பற்று பத்திரங்களுக்கு எண்ணெய் கிடைக்கும் என நம்புகிறோம். இல்லையெனில், மசகு எண்ணெய் பற்றாக்குறையால் நெப்தா மற்றும் பர்னஸ் எண்ணெய்க்குப் பதிலாக டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். அப்போது உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவதால் எரிபொருள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. அதேபோல் பர்னஸ் எண்ணெய் மற்றும் நெப்தாவிற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. நிலக்கரி மூலம் நாம் எதிர்பார்த்த உற்பத்தி கிடைக்காததால் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்கின. சாதாரணமாக ஒரு நிலையத்திலிருந்து 270 அலகுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். மூன்று நிலையங்களில் ஒன்றில் 270 அலகுகளும், மற்றொன்றில் 266 அலகுகளும், இன்னொன்றில் 244 அலகுகளுமே உற்பத்தியாகின.

இது மாறுபடக்கூடியது. 900 மெகாவாட் இருந்தாலும், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 810 மெகாவாட்டே கிடைக்கிறது. ஒவ்வொரு நிலையத்திலும் அதன் உள்நாட்டுத் திறனுக்காக தலா 30 மெகாவாட் செலவாகிறது.

சில நேரங்களில் 270 அலகுகள் கிடைப்பதில்லை. உண்மையைச் சொல்வதானால், நிலக்கரியின் தரத்தில் ஒரு பிரச்சினை உள்ளது. இது விலைமனுகோரல் நடைமுறையின் பிரச்சினையல்ல, விநியோகிக்கும் நிறுவனம் எமக்குச் சரியான முறையில் வழங்காததுதான் அதற்கான காரணமாகும்.

நிலக்கரி முறையான ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன. கப்பலில் ஏற்றுவதற்கு முன் ஆய்வகம் நிலக்கரி தரமானது என அறிக்கை சமர்ப்பிக்கிறது. அதன் பின்னரே 80 சதவீத பணத்தைச் செலுத்துகிறோம்.

மீதி 20 சதவீத தொகையைச் செலுத்த நாம் மீண்டும் இந்திய ஆய்வகம் ஒன்றின் மூலம் பரிசோதிக்கிறோம். ஏதோ ஒரு காரணத்தினால் இந்த இரண்டு ஆய்வகங்களிலும் அது தோல்வியடைந்துள்ளது. ஆனால் எமது கட்டமைப்பு முகாமைத்துவத் தரப்பினர் எமக்குத் தேவையான உற்பத்தி கிடைப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக சில நிலக்கரி விநியோகங்களுக்கான 20 சதவீத கொடுப்பனவை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். சில அறிக்கைகளுக்காக அபராதம் விதிக்கத் தீர்மானித்துள்ளோம்.

சிலவற்றுக்கு 80 சதவீத கட்டணத்தை கூட செலுத்தவில்லை. எனவே, தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் மின் இழப்பை டீசல் மூலம் உற்பத்தி செய்ய ஏற்படும் மேலதிக செலவை அந்த நிறுவனத்திடமிருந்தே அறவிடுவோம். அதனை எக்காரணம் கொண்டும் நாட்டு மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க மாட்டோம்.

நிலக்கரி விநியோகத்தர்கள் ஒரு கப்பல் நிலக்கரியை 98 டொலருக்கு வழங்கினர். அபராதத்தின் படி ஒரு மெட்ரிக் தொன் விலை 64 டொலராக குறைகிறது. அந்தளவிற்குப் பெரிய அபராதங்களை விதிக்கிறோம். குறித்த கட்டணத்தை செலுத்த மறுத்தால் வழக்குத் தொடர்வோம். ஆனால் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டீசல் பயன்பாடு போன்ற காரணிகளால் ஏற்படும் செலவுகள் உள்ளன.

தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் இழப்பை அந்த நிறுவனமே ஏற்க வேண்டும். அதனை மக்கள் மீது சுமத்த மாட்டோம். அதன்படி, 90 அலகுகளுக்கும் குறைவாகப் பயன்படுத்துவோருக்கு அடுத்த மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது ஒரு மானியத்தை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

இந்த மானியத்திற்காக மாதம் 500 கோடி ரூபா வீதம், மூன்று மாதங்களுக்கு 1500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளோம். தற்போதுள்ள கணக்கீட்டின்படி மூன்று மாதங்களுக்கு 32 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது. அதில் 15 பில்லியனை அரசாங்கம் ஏற்கும். நிலக்கரி பிரச்சினையால் ஏற்படும் சுமார் 7 பில்லியன் இழப்பு அந்த நிறுவனத்திடம் அறவிடப்படும். இதுதான் முறை. இதைவிடச் சிறந்த முறை இருந்தால் எதிர்க்கட்சியினர் குறிப்பிடலாம் என்றார்.