பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை ( 09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
"சஹ்ரான் நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் முஸ்லிம் சமூகம் பாரிய இழிவுக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்தது. சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் யாருடைய உதவியும் இன்றி இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே நிலவுகிறது. தற்போதைய அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன அன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, சஹ்ரானுக்குப் பின்னால் சிலர் இருப்பதை உறுதிப்படுத்தி ஒரு துண்டுச் சீட்டில் பெயரையும் எழுதிக் கொடுத்தார்.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவும் இது ஒரு 'சதித்திட்டம்' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் பின்னர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகி, நீதிமன்றம் ஊடாகத் தடையுத்தரவு பெற்றுக்கொண்டார். சஹ்ரானுக்குப் பின்னால் இருந்து செயற்பட்டவர்களைக் கைது செய்யாதது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், அவர்களைக் கண்டறியுமாறு நாங்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்போம் என்ற வாக்குறுதியுடன்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இறுதியில் ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரையே சூத்திரதாரிகளாகச் சித்தரித்தனர். போதிய சாட்சியங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
தேர்தல் காலத்தில் 'சூத்திரதாரி' ஒருவர் இருப்பதாகக் கூறிக்கொண்டவர்கள், இப்போது அப்படி எவரும் இல்லை என்கின்றனர். இந்தக் கருத்துக்கு எதிராக நான் பேசும் போது, என்னையே சூத்திரதாரியாகச் சித்திரிக்கின்றனர். சஹ்ரானுக்கு உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறியுமாறுதான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், அவர்கள் சஹ்ரானுடன் இந்த விசாரணையை முடித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
இந்தத் தாக்குதலால் தனிப்பட்ட முறையில் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். எனது மகன் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போனது; முஸ்லிம் பெண்கள் கலாசார ஆடைகளை அணிய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சஹ்ரானுக்கு உதவியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மிரட்டல்கள் மூலம் உண்மையை மறைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்," என்றார்.












