LGBTQI சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் திட்டத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கல்: மதத் தலைவர்களின் எதிர்ப்பால் ஆதரவு இரத்து !




மாற்றுப்பாலின மற்றும் பால்புதுமையின சுற்றுலாப்பயணிகள் (LGBTQI) இலங்கைக்கு வருகை தருவதை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிக்கு வழங்கி வந்த ஆதரவை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை மற்றும் பால்புதுமையின சமூக உரிமைகள் அமைப்பான ஈக்குவல் கிரவுண்ட் என்பவற்றுடன் இணைந்து கடந்த செப்டெம்பர் மாதம் அரசாங்கம் இந்த முயற்சியை ஆரம்பித்தது.

அதனையடுத்து "எமது சுற்றுலா சந்தைகளை பன்முகப்படுத்துவதற்கும் , இலங்கையை அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம் பெரிதும் பங்களிப்புச் செய்யும்" என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் ஈக்குவல் கிரவுண்ட் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஸன்னா பிளாமர்-கால்டெராவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏனைய கிறிஸ்தவ மற்றும் பௌத்த தலைவர்கள் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் இந்த முயற்சிக்கான ஆதரவை இரத்துச்செய்திருப்பதாக அறிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் சில தினங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் ரோஸன்னா பிளாமர்-கால்டெரா, "இம்முயற்சிக்கான ஆதரவு இரத்து செய்யப்பட்டிருப்பது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "சுற்றுலாத் துறையினருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அவர்கள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவும் ஆர்வத்துடனும் இருக்கின்றனர். அது எமது சுற்றுலாத்துறைக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் எந்தளவு ஊக்கமளிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்" என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.