கிளிநொச்சியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம் - குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை !



கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி 14 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை சான்றுப் பொருட்களோடு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கானது ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலும், பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் (27-) கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. கருணாகரன் முன்னிலையில் இவ்வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளிக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனையும் அத்துடன் முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறும், அது தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் இரண்டாம் குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.