மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் விற்பனை ; உணவக முகாமையாளருக்கு விளக்கமறியல்



மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், உணவகம் ஒன்றின் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் தொடுத்த வழக்கில், உணவகத்தின் முகாமையாளரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெள்ளிக்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

நகரின் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அருகில் உள்ள குறித்த உணவகத்தில் வெள்ளிக்கிழமை தயாரித்து வழங்கிய உணவுகள் மனித பாவனைக்கு உதவாதது என்றும் அந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தவகல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த உணவகத்தை முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், அங்கிருந்து பழுதடைந்த உணவுப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்டிருந்த பழுதடைந்த உணவுகளை சோதனைக்கு உட்படுத்தியதோடு, உணவகத்தின் முகாமையாளரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உணவக முகாமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர், உணவகத்துக்கு எதிராக இதுவரை முன்குற்ற வழக்குகள் இரண்டு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக நீதவானின் கவனத்துக்கு பொது சுகாதார உத்தியோகத்தர் கொண்டுசென்றிருந்தார்.

அதனையடுத்து உணவக முகாமையாளரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.