4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியர் கைது!


சட்டவிரோதமாக "குஷ்" ரக போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்த வெளிநாட்டு பயணி ஒருவர், இன்று புதன்கிழமை (13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 29 வயதுடைய இந்திய நாட்டு தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று அதிகாலை 12:30 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து 'தாய் ஏர்வேஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

தான் கொண்டு வந்த பொருட்களில் எவ்விதமான வரி செலுத்த வேண்டிய பொருட்களும் இல்லை எனக் கூறி, வெளியேற முயன்ற போதே இவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளையும் சோதனை செய்த போது, அவற்றில் 4 பொதிகளாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 389 கிராம் எடையுள்ள சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான "குஷ்" ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.