பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு அழைத்தமை முற்றிலும் தவறானது - மனோஜ் கமகே



மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் உள்ளங்களை கொள்ளையடித்தாரே தவிர திறைசேரியை கொள்ளையடிக்கவில்லை. பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு அழைத்தமை முற்றிலும் தவறானது. தேசியத்துக்காக குரல் கொடுக்கும் மக்கள் இதற்கு வெகுவிரைவில் பதிலளிப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (12) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையாகியிருந்த நிலையில் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆணைக்குழுவின் முன்பாக ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரச நிதியை கொள்ளையடித்ததாக குற்றஞ்சாட்டியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஷ மக்கள் உள்ளங்களை கொள்ளையடித்தாரே தவிர, திறைசேரியை கொள்ளையடிக்கவில்லை என்பதை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் மீது நம்பிக்கையில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே ஆணைக்குழு செயற்படுகிறது. இந்த அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி கொள்வனவு மோசடி, திறைசேரியின் 2.5 மில்லியன் மோசடி உட்பட பல மோசடிகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு அழைத்தமை முற்றிலும் தவறானது.தேசியத்துக்காக குரல் கொடுக்கும் மக்கள் இதற்கு வெகுவிரைவில் பதிலளிப்பார்கள். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்றும் நிதி வழங்குகிறது.

புலிகள் அமைப்பின் நோக்கத்துக்கு அமைவாக அரசாங்கம் செயற்படுவதால் சிலை வைத்து கௌரவிக்கப்பட வேண்டிய மஹிந்த ராஜபக்ஷ அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது என்றார்.