அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (27) காலை பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்பினர் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் "பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக...", “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்”, "மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவேண்டாம்”, “சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவாக நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிக்குவுக்கு எதிராக சட்டம் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை அரசு பலப்படுத்தவேண்டும்.
இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள், உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்ட வேளையில் மகஜர் வாசிக்கப்பட்டதுடன் அந்த மகஜர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் கையளிக்கப்பட்டது.













