
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனித இடங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என இராஜாங்கனை சத்தாரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விகாரைகளின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதுடன், அங்கு இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் குறித்தும் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் மக்கள் ராஜபக்ஷர்கள், பிரேமதாஸக்கள் மற்றும் விக்கிரமசிங்க ஆகியோரை ஆட்சியிலிருந்து அகற்றியது, நாட்டின் வளங்களைச் சூறையாடிய ஊழல்வாதிகளை வெளியேற்றி, நாட்டைச் சீரமைப்பதற்காகவே தவிர, தலதா மாளிகை, அநுராதபுரம் அட்டமஸ்தானம் மற்றும் நாட்டின் ஏனைய புனித விகாரைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காக அல்ல. இன்று சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யத்திற்காகப் பரப்பப்படும் தவறான கருத்துக்களை நம்பி, அரசாங்கம் இத்தகைய அபாயகரமான முடிவுகளை எடுக்கக்கூடாது. குறிப்பாக, கலகெடிவத்தை சுதத் மற்றும் கெக்கிராவ சுதர்சன போன்றவர்கள் முன்வைக்கும் இத்தகைய முட்டாள்தனமான கருத்துக்கள் அரசாங்கத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
விகாரைகளின் நிர்வாகம் குறித்துப் பேசும் அதேவேளை, அங்கு இடம்பெறும் தவறுகளையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். விகாரைகளுக்குள் சிறுவர்களைத் துறவறம் பூணச் செய்து, அவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதேபோல், விகாரைகளுக்கு வரும் சிறுவன் சிறுமிகள் தாய்மார்கள் பக்தர்களைத் தவறான நோக்கில் அணுகுவதும், விகாரை வளாகங்களுக்குள் சாரதிகள் மற்றும் இளையோரை வைத்துக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபடுவதும் கண்டிக்கத்தக்கவை.
ஒரு பிக்குவானவர், விகாரைக்குத் தர்மம் கேட்கவரும் தாயையும் மகளையும் மரியாதையுடன் நடத்த வேண்டுமே தவிர, அவர்களைக் குறித்த அறைகளுக்குள் அழைத்து முறையற்ற வகையில் நடந்துகொள்வது அப்பட்டமான துஷ்பிரயோகம். இத்தகைய விகாரைகளில் வாழும் பிக்குகள், தமது தனிப்பட்ட இன்பத்திற்காகவே மதத்தைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.












