டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் - மீண்டும் பொது மக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார் !


அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (27) செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் கண்களின் மண்ணைத் தூவி விட்டு தப்பியோடியுள்ளார்.

மனோஜ் அல்லது மனோஹரன் என்றழைக்கப்படும் பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை 23 ஆம் திகதி பொதுமக்களின் உதவியோடு பொகவந்தலாவை பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் நீதவான் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது இவரை எதிர்வரும் ஜுன் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி அட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கண்டி பல்லேகலை சிறைச்சாலைக்கு குறித்த சந்தேக நபர் கொண்டு செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று தனக்கு உடல் நலக்கோளாறு என இவர் கூறியதையடுத்து கண்டி தேசிய வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் இன்று 27 ஆம் திகதி காலை 5.45 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் பதுளை ஹாலிஎல, வட்டவளை, விக்டன், டிக்கோயா, லிந்துலை, பொகவந்தலாவை, புலத்சிங்ஹல, இங்கிரிய மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நடமாடியுள்ளதுடன், பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஊடகங்கள் வாயிலாக வழங்கப்பட்ட பரவலான பிரசாரம் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார் பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் இந்த சந்தேக நபரைக் கைது செய்திருந்தனர். தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அல்லது அவரைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.