மட்டக்களப்பு நகரில் சிறுமியை கடத்திச் சென்ற முச்சக்கரவண்டி மடக்கிப் பிடிப்பு - இருவர் கைது





மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தை ஒருவர் தனது மகளை மேலதிக வகுப்பிற்காக அழைத்துச் சென்றுள்ளார். பலத்த மழை காரணமாக அன்று வகுப்பு நடைபெறாது என ஆசிரியர் தெரிவித்ததைத் தொடர்ந்து, தனது மகளை அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும் பாதையில் காரிலிருந்து தந்தை இறக்கிவிட்டுள்ளார்.

சில நிமிடங்களில், சிறுமி இன்னும் வீட்டிற்கு வரவில்லை என உறவினர்கள் தந்தைக்குத் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அங்கு முச்சக்கர வண்டி (ஆட்டோ) ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் நிற்பதை அவதானித்துள்ளார்.

அவர் முச்சக்கர வண்டியை அண்மிக்க முயன்றபோது, அதிலிருந்த இளைஞன் தப்பியோடியுள்ளார். இதன்போது தனது மகள் முச்சக்கர வண்டிக்குள் மயங்கிய நிலையில் இருப்பதைக்கண்ட தந்தை, அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். சிறுமிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய வைத்தியர்கள், அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை மீட்டுச் செல்வதற்காக மற்றுமொரு இளைஞர் அங்கு வந்துள்ளார். "இந்த முச்சக்கர வண்டி என்னுடையது, எனது நண்பனே இதனை இங்கு கொண்டு வந்தார்" எனக் கூறி அதனை எடுத்துச் செல்ல முயன்றபோது அங்கிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த இளைஞர், "நானே காவல்துறையினருக்கு அழைக்கின்றேன், காவல் நிலையப் பொறுப்பதிகாரி எனது நண்பர்" எனக் கூறி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரைத் தடுத்து வைத்து நையப்புடைத்ததோடு, பொலிஸாருக்கு  தகவல் வழங்கி அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் நேற்று இரவு 11 மணியளவில் கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.