உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக மட்டும் பார்க்காதீர்கள் - பிரதமர்


உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக மட்டும் பார்க்காதீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட இந்த வாய்ப்பை உங்களது தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல், நாட்டின் சேவைக்காகவும் அர்ப்பணியுங்கள் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் விசேட மகாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தினால் நன்மையடைந்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்குதல் மற்றும் பழைய மாணவர்களையும் தற்போதைய மாணவர்களையும் ஒன்றிணைக்கும் மகாபொல பழைய மாணவர் இணையத்தளம் நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் இணைந்து இந்தத் தொழில்நுட்ப வலைத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததோடு 2023-2024 வருடம் புலமைபரிசில் பயன்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

இதன்போது தலைமை உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆவர் அங்கு மேலும் உiயாற்றுகையில்,

மகாபொல என்பது இந்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்த, நேசிக்கின்ற பெறுமதிமிக்க ஓர் நிதியமாகும். மறைந்த லலித் அத்துலத்முதலி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியத்தின் ஊடாக இதுவரையில் சுமார் 05 இலட்சம் மாணவர்கள் நன்மையடைந்துள்ளதாக இன்று நான் அறிந்து கொண்டேன். அவர்கள் இன்று பல்வேறு துறைகளில் நிபுணர்களாக இந்நாட்டுக்கும் உலகுக்கும் சிறந்த சேவையாற்றுவதற்கு இந்த நிதியம் வழியமைத்துக் கொடுத்துள்ளது. இந்நாட்டின் உயர்கல்வித் துறையை வலுப்படுத்தவும், மாணவர்களின் கல்விச் கனவை நனவாக்கவும் மகாபொல வழங்கும் பங்களிப்பு அளப்பரியது.

மிகவும் முற்போக்கான மற்றும் நேர்மறையான சிந்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பயணத்தில், இன்று நாம் மற்றுமொரு தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளோம். இந்த நிதியத்தின் மூலம் நன்மையடைந்த பழைய மாணவர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் ஊடாக அடுத்த தலைமுறையை கட்டியெழுப்பும் நோக்கில் புதிய இணையத்தள நுழைவாயில் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறந்த எண்ணக்கருவைச் செயல்படுத்திய அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இன்று எமது நாடு எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்று, ஆரம்பக் கல்வியில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறும் மாணவர்களின் விகிதம் குறைவாக இருப்பதாகும். அண்மைக்காலமாக சாதாரண தரத்திற்குப் பிறகு மேலதிக கல்வியைத் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நாட்டுக்கு பெரும் கவலையளிக்கும் விடயமாகும். உயர்கல்வி என்பது வெறும் பட்டத்தைப் பெறுவது மட்டுமல்ல் அது ஒரு தொழில்சார் ஆளுமையையும் உலகைப் பார்க்கும் விரிந்த பார்வையும் வழங்குகின்றது. நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்குவதற்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது எமது கல்விக் கொள்கையின் பிரதான இலக்காகும்.

கடந்த காலங்களில் மகாபொல கொடுப்பனவுகளை வழங்குவதில் நீண்டகால தாமதங்கள் நிலவியதை நாம் அவதானித்தோம். பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் உரிய காலத்தில் தமக்கான நிதியைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. எனினும், தற்போது அச்சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, மிகவும் வினைத்திறனான முறையில் நிதியம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு முக்கிய வெற்றியாக, மாணவர்களின் நலன் கருதி 5,000 ரூபாவாக இருந்த மாதாந்த மகாபொல கொடுப்பனவை 10000 ரூபாவாக அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். 2024-2025 ஆம் ஆண்டு இதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு, 2026 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் 10000 ரூபாவை மாதாந்தம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது எமது மாணவர்கள் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.

அத்துடன், இந்த நிதியத்தை வெறும் பண உதவி வழங்கும் இடமாக மட்டும் பார்க்காமல், பழைய மாணவர்களின் வலையமைப்பு ஊடாக மகாபொல மாணவர்களுக்குத் தேவையான மேலதிக வழிகாட்டல்களை வழங்கும் தளமாக மாற்ற நாம் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் உயரிய பதவிகளில் இருப்பவர்கள் மீண்டும் தமது கல்விச் சமூகத்துடன் இணைந்து அடுத்த தலைமுறைக்குக் கைகொடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று புலமைப்பரிசில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெற்றுக்கொண்ட இந்த வாய்ப்பை உங்களது தனிப்பட்ட முன்னேற்றத்தித்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், நாட்டின் சேவைக்காகவும் அர்ப்பணியுங்கள். இந்த மாகாபொல திட்டத்தில் நீங்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள். உங்கள் வாய்ப்பை சரிவர பயன்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகத் தெரிவு என்பது ஒரு விசேடமான வாய்ப்பு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு சிறந்த ஆளுமையாக உருவாக வேண்டும். உங்கள் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு முன்மாதிரியான நற்பிரஜைகளாகத் திகழ வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வெற்றியை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் என்றார்.