ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், அவருக்கு எதிராக நீதவான் பிடியாணை பிறப்பித்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ஜயந்த சமரவீர உடல்நிலை குறைவாக இருப்பதாகத் தெரிவித்து வைத்திய அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில் உள்ளிட்ட ஐவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, அது சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.












