வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
வெசாக் வாரத்தின் கலாசார மற்றும் மத விழுமியங்களுக்கு முரணான வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மத வழிபாட்டுத் தலங்கள், விசேடமாக தானசாலைகள் மற்றும் வெசாக் வலயங்களுக்கு அருகில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சிவில் உடை அணிந்த பொலிஸாரும், புலனாய்வு அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீதிகளில் அபாயகரமான அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் அல்லது ஏனைய வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும்.
வட்ஸ்அப் இலக்கம் : 070-4755600, அவசர தொலைபேசி இலக்கம்: 119 அல்லது 188 ஆகிய இலக்கங்களுக்கும் பொதுமக்கள் தொடர்புகொள்ள முடியும் என்றார்.
வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.


.png)









.jpg)
