இன்றைய வானிலை


இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்தத் தொகுதி அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால், நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, இந்தத் தொகுதி தற்போது 10.1N மற்றும் 83.5E அண்மையில் நிலைக்கொண்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் மழை அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகம் இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடல் பகுதிகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25-35 கிலோமீற்றர் வேகத்தில் வீசும். புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் அக் கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.