துறவிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முதலில் சங்க நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும் - பலாங்கொடை கஸ்ஸப தேரர்



துறவிகளின் ஒழுக்கத்தன்மையை முதலில் சங்க நீதிமன்றங்கள் மூலமே விசாரணை செய்ய வேண்டும். அதன்பின்னரே சாதாரண நீதிமன்றத்தக்கு அதனை கொண்டு செல்ல வேண்டும். ஒரு தனிப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தையும் அவமதிக்கும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்லேகம ஹேமரத்ன தேரரின் சிறுமி பாலியல் விவகாரம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள்; எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கஸ்ஸப்ப தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பல்லேகம ஹேமரத்ன தேரர் தற்போதைய நிலையில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை. ஒரு சிறிய குழந்தை துன்புறுத்தப்பட்டிருந்தால், அது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. நீதிமன்றம் ஊடாக அதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனால், நீதிமன்றம் ஒருவரை குற்றவாளியாக அறிவிக்கும் முன்பே, சமூக ஊடகங்கள் அவரை குற்றவாளியாக்கி தீர்ப்பு வழங்கிவிட்டன. பௌத்த துறவிகள் என்ற வகையில், புத்த பெருமானால் அருளப்பட்ட தர்ம ஒழுக்கநெறிக்கு அமையவே துறவிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

இதற்காக அரசியலமைப்பின் 105(4) பிரிவின் கீழ் சங்க நீதிமன்றங்களை ஸ்தாபிக்க முடியும். இருப்பினும், அதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றம் இதுவரை சட்டமாக்கவில்லை. இதனாலேயே துறவிகளின் பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கி, ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் குற்றஞ்சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்லேகம ஹேமரத்ன தேரர் என்பவர் ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர் அல்ல, அவர் அட்டமஸ்தானத்தின் விகாராதிபதி மட்டுமே.

அவர் விகாராதிபதியாக இருப்பதன் அர்த்தம், அவர் மட்டுமே பௌத்த சாசனத்தில் இருக்கும் ஒரேயொரு பிக்கு என்பது அல்ல. அவரை விடவும் ஒழுக்க சீலர்களாக தர்மத்தின் வழி வந்த பல தேரர்கள் இன்று ஆரண்யங்களில் வசிக்கின்றனர்.

அவர்களைப் பற்றி எவரும் பேசுவதில்லை. தற்போதைய சமூகத்தில் நல்லொழுக்கத்தைப் பேணும் துறவிகளை விட, தவறான பாதையில் செல்லும் துறவிகள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

எனவே, துறவியோ அல்லது குருவோ யாராக இருந்தாலும், நாட்டின் குழந்தைகளை துன்புறுத்துவார்களாயின் அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாலும், அவை வெளியில் வருவதில்லை. இது திட்டமிட்ட கலாசார விரோத செயற்பாடாகும்.

பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான குழுவினர், இந்த தனிப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தின் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.

அட்டமஸ்தானம் போன்ற புனிதமான பெயர்களை சில ஊடகங்கள் மிகவும் தரக்குறைவாகவும், மோசமான முறையிலும் பயன்படுத்துவதை நாம் அவதானித்தோம்.

இவ்வாறான சம்பவங்களின் போது பொலிஸாரோ, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையோ அல்லது சிறுவர் மற்றும் பெண்கள் பணியகமோ முறையாக தலையிட்டு விசாரணைகளை மேற்கொண்டால், இது குறித்து எம்மால் பேச வேண்டிய தேவை இருக்காது.

துறவிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க சங்க நீதிமன்றங்கள் செயற்றிறன் மிக்கதாக இருக்க வேண்டும். இஸ்லாமிய சமூகத்துக்கு தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க காதி நீதிமன்றங்கள் இருப்பது போன்று, பௌத்த துறவிகளுக்கும் அந்த அதிகாரம் சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும்.

ஏன் இந்த சட்ட அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்க மறுக்கிறது? இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயக்கம் காட்டுகிறது என்பதை ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும்.

துறவிகளின் ஒழுக்கத்தன்மையை முதலில் சங்க நீதிமன்றங்கள் மூலமே விசாரணை செய்ய வேண்டும். அதன்பின்னரே சாதாரண நீதிமன்றத்தக்கு அதனை கொண்டு செல்ல வேண்டும். இந்த முறையே அரசாங்கத்துக்கு தெரியவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

இன்றைய சமூகக் கட்டமைப்பு சீரழிந்து காணப்படுகிறது. வறுமை காரணமாகவே அந்த தாய் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. அந்த குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என்பது எமக்குத் தெரியாது.

வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல், ஒரு தனிப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தையும் அவமதிக்கும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தேவையில்லாத பாலியல் சார்ந்த கருத்துகளைப் புகுத்தி, கல்வித் துறையை சீரழிக்கும் இவ்வாறான செயல்களை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.