சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு


பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இரத்துச் செய்யக் கோரி, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரீட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத் நீதிபதி ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனு வியாழக்கிழமை (11) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்தியல் இலங்கையில் எவ்வாறு செயற்பட்டது என்பதை விளக்கினார். 39 இலங்கையர்கள் சிரியாவுக்குச் சென்று அவ்வமைப்பில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மாவனல்ல புத்தர் சிலைகள் உடைப்புச் சம்பவம் மற்றும் சஹ்ரான் ஹாஷிமின் குழுவினர் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலாந்த ஜயவர்தனவினால் 97 எச்சரிக்கை அறிக்கைகளும் 129 பேர் அடங்கிய பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அத்துடன், கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி இந்தியப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்திருந்தது.

எனினும், சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று விசாரணைகளை முன்னெடுக்காமல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் அலட்சியமாகச் செயற்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பிருப்பதாக எந்தவொரு விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலும் கண்டறியப்படவில்லை எனவும், தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜயகீ த அல்விஸ் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து மேலதிக சாட்ச்சி பதிவுகளுக்காக மனு மீதான விசாரணை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.