மாகாண சபை தேர்தலுக்கு புதிய சட்டம் : 4 மாற்று வழிகளுடன் பாராளுமன்றத்தை நாடுகிறது தெரிவுக்குழு!


நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் காணப்பட்ட சட்டச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், தேர்தல் முறைமை குறித்து தீர்மானிக்கும் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள சட்ட ரீதியான தடைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அண்மையில் கூடியபோதே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவின் அடுத்த கட்டம் மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் 3யு(14) பிரிவின் கீழ், எல்லை நிர்ணய ஆய்வுக் குழு தனது அறிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறியதால் தற்போதைய தேர்தல் முறையில் சட்ட முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவுக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மூலமோ அல்லது சட்டத்திற்கு சாதாரண விளக்கம் அளிப்பதன் மூலமோ இதற்கு தீர்வு காண முடியாது எனத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர், இந்த முட்டுக்கட்டையை உடைக்க 4 மாற்று வழிகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிசீலனைக்கு முன்வைத்துள்ளார்.

அதாவது 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு, 1988 ஆம் ஆண்டின் பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் திரும்புதல் அல்லது 2017 ஆம் ஆண்டு திருத்தம் நடைமுறையில் இருந்த போதிலும், பழைய தேர்தல் சட்டத்தை எதிர்கால தேர்தல்களுக்காக மீண்டும் சட்டப்பூர்வமாக வலுப்படுத்துதல் அல்லது 2017 திருத்தத்தை நீக்கிவிட்டு, பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய முற்றிலும் புதிய தேர்தல் முறை ஒன்றை அறிமுகப்படுத்துதல் அல்லது எல்லை நிர்ணய மறுஆய்வுக் குழுவின் காலக்கெடுவை நீடித்து, ஏற்கனவே எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்கி, அடுத்த கட்டத்தில் இருந்து எல்லை நிர்ணய செயல்முறையைத் தொடங்குதல் என்பதாகும்.

பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம் முழுமையாக நீக்கப்பட்டால், அதன் மூலம் அதிகரிக்கப்பட்ட பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக சட்டமா அதிபர் தினைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் புதிய சட்டம் மூலமே பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான கட்டாய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், வெறும் பாராளுமன்ற பிரேரணை மூலம் இதனை செய்ய முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் விளக்கத்தின் மூலம் தற்போதைய சட்ட நிலைமை தெளிவாகியுள்ளது. எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது மற்றும் புதிய சட்டத்தில் பெண்கள், இளைஞர் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்து தெரிவுக்குழு இறுதி முடிவை எடுப்பது தொடர்பில் கலந்தாலோசித்து வருகிறது.

அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான தெரிவுக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 3 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த பாராளுமன்ற அமர்வில் காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என வெளியாகும் வதந்திகளை மறுத்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார். இதன்படி, தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன், புதிய சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்தலுக்கான வழிமுறைகள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.