இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 521 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ


பூகோள யுத்தச் சூழ்நிலை காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் சுமார் 70 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 521 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இந்த ஒட்டுமொத்தப் பாரிய சுமையையும் திறைசேரியால் மாத்திரம் தனித்துத் தாங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு தாங்க முயன்றால் மீண்டும் மக்கள் மீது அதிக வரிகளை விதிக்க நேரிடும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் விநியோகத்தைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை எனத் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் திறைசேரி, எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இந்தச் சுமையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பூகோள யுத்தச் சூழ்நிலை காரணமாக மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் உலக சந்தையில் சுமார் 70 சதவீதத்தால் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த உலக சந்தை விலை அதிகரிப்பு காரணமாக, தற்போதைய உள்நாட்டு விற்பனை விலையின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் லீற்றர் ஒன்றுக்கு 358 ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. ஆர்.எம். பார்க் நிறுவனம் 346 ரூபாவும், சினோபெக் நிறுவனம் 186 ரூபாவும், ஏனைய நிறுவனங்கள் 194 ரூபாவும் டீசலுக்காக நஷ்டத்தைத் எதிர்கொள்கின்றன.

பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு கூட்டுத்தாபனம் 23 ரூபாவும், ஆர்.எம். பார்க் நிறுவனம் 157 ரூபாவும், சினோபெக் 29 ரூபாவும், பிற நிறுவனங்கள் 38 ரூபாவும் நஷ்டமடைந்து வருகின்றன. இவ்வாறான நஷ்டத்துடனேயே நிறுவனங்களும் கூட்டுத்தாபனமும் தற்போது எரிபொருட்களை விற்பனை செய்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த விலை அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு, மக்களுக்குச் சலுகை வழங்குவதற்காகப் திறைசேரியிலிருந்து 58,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் டீசல் லீற்றருக்கு 100 ரூபாவும், பெற்றோல் லீற்றருக்கு 20 ரூபாவும் சலுகையாக வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த மூன்று மாதங்களாக நிறுவனங்களும் இந்த நஷ்டத்தின் ஒரு பகுதியைத் ஏற்றுக் கொண்டன.

இலங்கையின் எரிபொருள் நுகர்வை அவதானிக்கையில், ஜனவரி மாதத்தில் 4,538 கிலோலீற்றராக இருந்த ஒட்டோ டீசல் நுகர்வு, மே மாதத்தில் ஓரளவு குறைந்து 82 சதவீத மட்டத்திலேயே பேணப்படுகிறது. தொழில்துறைக்கான டீசல் பயன்பாடு ஜனவரியில் இருந்த அதே 594 கிலோலீற்றர் மட்டத்திலேயே மே மாதத்திலும் காணப்படுகிறது. பெற்றோல் 92 நுகர்வு ஜனவரியில் 5,565 கிலோலீற்றராக இருந்து மே மாதத்தில் 4,849 கிலோலீற்றராகக் குறைந்துள்ளது.

ஆனால், உலக சந்தையில் விலை அதிகரித்ததன் காரணமாக, எரிபொருள் இறக்குமதிக்கான எமது மாதாந்த செலவு பாரியளவில் உயர்ந்துள்ளது. ஜனவரியில் 126 மில்லியன் டொலராக இருந்த இறக்குமதிச் செலவு, மே மாதத்தில் 521 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த சுமையையும் திறைசேரியால் மாத்திரம் தாங்கிக்கொள்ள முடியாது.

திறைசேரி முழு சுமையையும் தாங்கிக் கொண்டால் மீண்டும் மக்கள் மீதே வரி விதிக்க வேண்டி வரும். அதனால்தான் திறைசேரி ஒரு பகுதியைத் தாங்கிக்கொள்ள, எஞ்சிய பகுதியை விலை அதிகரிப்பு மூலம் ஈடுசெய்ய வேண்டியதாயிற்று. ஆனாலும், அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் விநியோகத்தைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் திறைசேரி, நிறுவனங்கள் மற்றும் மக்கள் ஆகிய மூன்று தரப்பும் இந்தச் சுமையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒருவேளை இந்த விலை அதிகரிப்பைச் செய்யாவிட்டால், நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி செய்வதை நிறுத்திவிடும், இதனால் விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலைந்துவிடும்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யவே எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. நிலக்கரியின் தரம் குறைந்த விவகாரத்தில் மக்கள் மீது நாம் எந்தவொரு சுமையையும் சுமத்தவில்லை. தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டு வந்த கப்பல்களுக்கு எதிராக சட்டத்துக்கமைய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு டொலர் கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்யவே ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. நஷ்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுபவர்கள் இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்து அதனை நிரூபிக்க முடியும். மின்சார சபையைப் பொறுத்தவரை, மின் உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டே கட்டணங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, பொருளாதாரம் 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலைக்குச் சென்றுவிடும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றன. கடந்த வருட டிசம்பரிலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றன். பின்னர் மார்ச்சில் வீழ்ச்சியடையும் என்றனர். அவர்கள் ஒவ்வொரு மாதமாகத் தவணை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆனால் அரசாங்கம் இன்னும் ஸ்திரமாகவே இயங்கி வருகிறது. எனவே எதிர்க்கட்சிகளின் இந்த அரசியல் பேச்சுகள் குறித்து நாம் கவலையடைப் போவதில்லை என்றார்.