வேன் முச்சக்கரவண்டி விபத்து: 5 பேர் காயம் புத்தளதில்லையடியில் சம்பவம்.


புத்தளம், தில்லையடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரத்திற்குத் ஆன்மீகப் பயணம் சென்று விட்டு, அங்கிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி, முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதுடன், அருகில் இருந்த கட்டடமொன்றிற்குள்ளும் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொலிஸாரின் தகவல்களுக்கு அமைவாக, தில்லையடி பகுதியில் வேன் பயணித்துக் கொண்டிருந்த போது கார் ஒன்று திடீரென வீதிக்கு குறுக்கே வந்துள்ளது. இதனால் ஏற்படும் விபத்தை தவிர்ப்பதற்கு முயன்றபோதே வேன் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியுள்ளது.

அவ்வாறு கட்டுப்பாட்டை இழந்த வேன், பாலாவி திசையிலிருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதுடன், வீதியின் மறுபக்கத்தில் இருந்த கட்டடமொன்றிற்குள் புகுந்து மோதியுள்ளது.

ஆறு பயணிகளுடன் பயணித்த இந்த வேனை விபத்து நடந்த சமயத்தில் பெண் ஒருவரே செலுத்தியுள்ளார்.

இந்த விபத்தின் காரணமாக வேனில் பயணித்த இருவர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் மோதி விபத்துக்குள்ளான அந்த கட்டடத்திற்குள் விபத்து நடந்த நேரத்தில் பெண்கள் குழுவொன்று இருந்துள்ளதுடன், அதிர்ஷ்டவசமாக அவர்கள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.