
2026 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசாங்கம் உயர்தர மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எவ்வித கவலையும் இன்றி காலம் கடத்தி வருகிறார்கள்.
பொதுவாக ஓர் உயர்தர மாணவர் தனது பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்து பரீட்சைக்குத் தயாராவதற்கு சுமார் 26 மாதங்கள் வரையிலான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கமானது 2026 உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்மூலம் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் பரீட்சைக்கு உழைக்கும் 6 மாத காலத்தை அரசாங்கம் பறித்துள்ளது.
தற்போது உயர்தர பரீட்சைக்கு தயாராகும் மாணவ தலைமுறையானது ஏற்கனவே தித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக தங்களது கல்வியை இழந்து தவித்த ஒரு தரப்பினராவர். இவ்வாறானதொரு பின்னணியில் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் செயற்படுவது முறையற்றது.
மேலும், அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவை உடனடியாக கைவிடுமாறும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குரிய நீதியை வழங்குமாறும் அரசாங்கத்துக்கு தான் வலுவாக அழுத்தம் கொடுப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.







.jpg)



.jpeg)
