சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனின் விடுதலைக்காக சுமந்திரனால் ஜனாதிபதியுடன் ஏன் பேச முடியவில்லை? - அர்ச்சுனா இராமநாதன்



மட்டக்களப்புக்கு ஜனாதிபதியை அழைத்து, நூலகத்தை திறக்க முடிந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனின் விடுதலைக்காக ஜனாதிபதியுடன் ஏன் பேச முடியவில்லை? அனைத்தும் நாடகம். தமிழ் மக்கள் இனியேனும் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாடல் பாடியதற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராக இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றி அவரை சாதாரண குற்றச்சாட்டில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தாம் அவரை விடுவிப்பதாக கூறியுள்ளார்.

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து சுமந்திரனால் நூலகத்தை திறக்க முடியுமென்றால் ஏன் அவரால் ஜனாதிபதியுடன் கதைத்து சங்கீத்ஷனை விடுவிக்க முடியாது?எல்லாம் நாடகமே. சுமந்திரனால் அதை செய்ய முடியாது. சங்கீதஷனை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதே இதற்கு காரணமாகும்.

வடக்கு மக்களை ஏமாற்றி இவர்கள் இவ்வாறான அரசியலில் ஈடுபடுகிறார்கள்.தமிழ் மக்கள் இனியாவது உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.