( மின்மினி மின்ஹா )
மா மரச் செய்கையில் ஒருங்கிணைந்த முகாமைத்துவ முறைகளை விவசாயிகள் நடைமுறையில் பின்பற்றுவதன் மூலம் தரமான மற்றும் அதிக விளைச்சலைப் பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் செயன்முறைப் பயிற்சி நிகழ்ச்சி, சம்மாந்துறை மேற்கு விவசாய போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது.
மாகாண விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி. திஸ் நாயக்க அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை விவசாய போதனாசிரியர் எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய தொழில்நுட்ப உதவியாளர்கள், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் விவசாயக் கற்கை மாணவ, மாணவிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பயிற்சியின் போது மா மரச் செய்கையில் ஆரம்ப கட்டமான நிலத் தெரிவு மற்றும் குழி அமைத்தல் முதல் பசளைப் பயன்பாடு, களைக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், கத்தரித்தல், பெக்டோபியூட்டசோல் பயன்பாடு, மாங்காய்களுக்கு பொதியிடல், ரொக்கிங் ஸ்பிரேயர் மூலம் தெளித்தல், அறுவடை, அறுவடைக்குப் பின்னரான பராமரிப்பு மற்றும் களஞ்சியப்படுத்தல் வரை அனைத்து முகாமைத்துவ நடவடிக்கைகளும் செயன்முறை விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டன.
விவசாயிகளின் அறிவையும் தொழில்நுட்பத் திறனையும் மேம்படுத்தி, நவீன விவசாய முறைகளை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக இருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.











.jpg)
.png)

