பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரிப்பு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை


இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் 'சிறுவர் உழைப்பிற்கு எதிரான சர்வதேச தினத்தை' முன்னிட்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் விடுத்துள்ள விசேட செய்தியிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்முறை இத்தினமானது 'சிறுவர் உழைப்பற்ற நாடு, பிள்ளைகளுக்கு சிறந்த நாளை' என்ற கருப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர் உழைப்பு மற்றும் சுரண்டல் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதற்கமைய சிறுவர் உழைப்பு தொடர்பான முறைப்பாடுகள் – 173, பிள்ளைகளை யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தியமை – 287, சிறுவர் கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் – 53, பாலியல் நடவடிக்கைகளுக்காக பிள்ளைகளை இடைத்தரகர்களாகப் பயன்படுத்தியமை – 03 என முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வரையறைக்கு இணங்க, 16 வயதுக்கு குறைந்த அனைத்து பிள்ளைகளும் கட்டாயக் கல்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களை எவ்வித வேலைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளை அவர்களின் உயிர், ஆரோக்கியம், கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வேலைகளில் மாத்திரம் ஈடுபடுத்த முடியும். எனினும், அவர்களை ஆபத்தான பணிகளிலோ அல்லது இரவு நேரப் பணிகளிலோ அமர்த்துவது முற்றிலும் தடை

பிள்ளைகளை வீட்டுப் பணிப்பெண்களாகவோ அல்லது வீட்டு வேலைகளிலோ அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல், பிள்ளைகளை பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 288 ஆவது பிரிவின் கீழ் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

மேலும், சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துதல், வீதி வியாபாரத்தில் ஈடுபடுத்துதல், சர்க்கஸ் உள்ளிட்ட வினோதக் காட்சிகளில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தல், போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனைக்கு பயன்படுத்துதல், விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் மற்றும் சைபர் (இணையம்) தொழில்நுட்பம் ஊடாக வணிக ரீதியாக சுரண்டுதல் ஆகிய அனைத்தும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும். பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான 71 ஆபத்தான வேலைவாய்ப்புகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகுவதைத் தடுத்தல் மற்றும் சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்காக அதிகாரசபை பல விசேட திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதன் கீழ், ஜூன் 12 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதான காரியாலயத்தில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அத்துடன், பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் தூதுவர்கள் மூலமாக நாடு தழுவிய ரீதியில் இந்த வருடம் முழுவதும் விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.