
அடுத்த ஆண்டு முதல் ஆறாம் தரத்துக்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை அமுல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முழுமையான தயார்நிலையில் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெள மற்றும் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த, உப தலைவர் திலக் தர்மரத்ன உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதாவது,
புதிய கல்வி மறுசீரமைப்புகள் 5 தூண்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அவற்றை கண்காணிப்பதற்காக 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக கல்வி அமைச்சரின் தலைமையில் மேலும் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்டறிக
ஆறாம் தரத்துக்கான முதலாம் தவணைப் பாட அலகுகள் அனைத்தும் அச்சிட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டாம் தவணைப் பாட அலகுகளையும் ஒரே நேரத்தில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் நாட்டிலுள்ள 6,500 இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய 373 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.












